கோவை: சூலூர் சிறுமி கொலை வழக்கில் 3 நாள் போலீஸ் காவல் முடிந்து, குற்றவாளிகள் இன்று கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 நாள் போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து குற்றவாளிகள் கார்த்தி மற்றும் மோகன்ராஜ் இன்று மீண்டும் கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து இருவரும் மீண்டும் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் திரண்டதால் துப்பாக்கி ஏந்திய போலீசார் உட்பட நூற்றுக்கணக்கான போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
இந்த வழக்கில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வழங்கப்பட்ட 3 நாள் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில், தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில் முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவ இடத்திலும் குற்றவாளிகள் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டிருந்தது.
குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், கோவை போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் நுழைவு வாயிலில் இருந்து நீதிமன்ற அறை வரை கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


