அண்ணாமலைக்கு தோல்வி உறுதி- அமைச்சர் அருண்ராஜ் கோவையில் பேட்டி…

கோவை: அண்ணாமலைக்கு தோல்வி நிச்சயம் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மக்கள் தீர்ப்பை மதிக்காமல், பாடம் கற்றுக்கொள்ளாமல் திமுக பேசிக்கொண்டே இருந்தால் திமுக நன்றாக இருக்கும்; தொடர்ந்து அவர்கள் அப்படியே பேசட்டும் என்றார்.

Advertisement

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை மிகவும் குறைவாக இருப்பதாகவும், பயிற்சி மருத்துவர்கள், வெளிநாட்டு மருத்துவர்கள், முதுநிலை மருத்துவர்கள் ஆகியோர் பணியாற்றி வருவதாகவும் கூறினார். அதேசமயம், செவிலியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், அதுவும் விரைவில் சரிசெய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

90 நிமிடங்களில் 430-க்கும் மேற்பட்ட திட்டங்களை அமைச்சரவை எவ்வாறு ஆலோசித்தது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழ்நாட்டுக்கான தொலைநோக்குத் திட்டங்களின் ஒரு பகுதியாக 436 திட்டங்கள் குறித்து விரிவான கையேடு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார். ஒவ்வொரு திட்டத்தையும் தனித்தனியாக விவாதிக்கவில்லை என்றும், நீண்டகாலத் திட்டங்கள் குறித்த விரிவான பார்வையே வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

“436 திட்டங்களை 90 நிமிடங்களில் முழுமையாக ஆலோசிக்க முடியாது. திட்டங்களுக்கான விவரங்கள் அனைத்தும் கையேடுகளில் உள்ளன. அவற்றைப் பார்த்து எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது” என்றார்.

அதிமுகவை தாய் இயக்கம் என்று ஆதவ் கூறியதற்கு பதிலளித்த அவர், அதிமுக மட்டுமல்லாமல் பல்வேறு கட்சிகளில் இருந்தும் தவெகவிற்கு பலர் வந்து கொண்டிருப்பதாகக் கூறினார். முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இணைந்து வருவதாகவும் தெரிவித்தார்.

Advertisement

“அதிமுகவைப் பொறுத்தவரை, ஏன் தவெகவிற்கு வருகின்றனர் என்றால், 108 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடுத்த சில முடிவுகள் தவறாக அமைந்துள்ளன. 2026 தேர்தலில் பாஜகவுடன் இணைந்தனர். அதன் பிறகு திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என நினைத்ததும் ஒரு தவறான முடிவாகவே பார்க்கப்படுகிறது. இதை எதிர்த்தே பலர் வெளியேறி வருகின்றனர்” என்றார்.

மேலும், “கூடிய விரைவில் அதிமுகவின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை மக்கள் பார்க்கப் போகிறார்கள்” என்றும் கூறினார்.

தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட மருத்துவ இடங்களை நிரப்புவதில் கட்-ஆஃப் மதிப்பெண்கள் அதிகமாக இருப்பதே சிக்கலாக உள்ளதாக அவர் தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அகில இந்திய மருத்துவ இடங்களுக்கு திருப்பி அளிக்கப்பட்ட இடங்கள், கட்-ஆஃப் குறைக்கப்பட்ட பின்னர் நிரப்பப்பட்டதாகவும் கூறினார்.

“கட்-ஆஃப் மதிப்பெண்ணைக் குறைக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இருந்திருந்தால், நாமே அதை குறைத்து அனைத்து இடங்களையும் நிரப்பியிருப்போம். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை மேல்முறையீட்டிற்காக அணுகியுள்ளோம். விரைவில் நல்ல முடிவு வரும் என்று நம்புகிறோம்” என்றார்.

மழைக்காலங்களில் தொற்றுநோய்கள் பரவாமல் தடுப்பது குறித்து அடுத்த வாரம் அனைத்து மருத்துவக் கல்லூரி டீன்கள் மற்றும் இணை இயக்குநர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

அண்ணாமலை புதிய இயக்கம் தொடங்குவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். அது ஜனநாயக உரிமை. எந்தக் கறையையும் மக்கள் மன்னித்து விடலாம். ஆனால் பாஜக என்ற கறையை மக்கள் ஏற்க மாட்டார்கள்” என்றார்.

மேலும், “பாஜக பல இடங்களில் முயற்சி செய்து தோல்வியடைந்துள்ளது. தற்போது புதிய முயற்சியை எடுத்துள்ளது. ஹிட் ஆன படம் மீண்டும் வெளியானால்கூட மக்கள் பார்க்க வரமாட்டார்கள்; ஒருசிலரின் படங்களை மட்டுமே மக்கள் மீண்டும் பார்க்க வருவார்கள். ஏற்கனவே பலமுறை தோல்வியடைந்த படம்தான் இது (பாஜக). இது மக்களிடம் எவ்வாறு எடுபடும் என்பது தெரியவில்லை. எனவே தோல்வி நிச்சயம்” என்று தெரிவித்தார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...