கோவை: பல திட்டங்களின் கனவை முடக்கியது தி.மு.க என்று கோவையில் நடைபெற்ற பெண்கள் நலத்திட்ட விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டு.
வடவள்ளி பகுதியில் அ.தி.மு.க முப்பெரும் தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி சார்பில் கழக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் இன்ஜினியர் சந்திரசேகர் ஏற்பாட்டில், மகளிர்க்கு நலத் திட்ட உதவி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-
தாலிக்கு தங்கம் முதல் மிக்சி, கிரைண்டர் வரை பெண்களுக்குப் பொற்கால ஆட்சியைத் தந்தவர் ஜெயலலிதா. ஆனால், இன்றைய தி.மு.க அரசோ பழைய திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதையே பிழைப்பாக வைத்து உள்ளது.
தேர்தலுக்காக மாணவர்களுக்கு மடிக்கணினியை கொடுத்துள்ளனர். மக்களுக்கு எந்த நலத்திட்டமும் செய்யவில்லை. நாங்கள் வடவள்ளி பகுதியில் அத்தனை திட்டங்களும் பார்த்துப்பார்த்து செய்துள்ளோம்.
குறுகலான சாலைகளை விரிவாக்கம் செய்து விபத்துகளைக் குறைத்தோம். உயிர்களை காப்பாற்றி உள்ளோம். அவிநாசி ரோடு மேம்பாலத்தையும் கட்டினோம். லாலி ரோடு பாலம் அறிவித்தோம். ஆனால் அதனை இப்போது கட்டவில்லை.
நாங்கள் அறிவித்த திட்டங்களை நிறுத்துவதை மட்டுமே இந்த ஆட்சி செய்கிறது. ஐ.டி துறையில் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளைக் கொடுத்திருப்போம், அத்தகைய திட்டங்களை எல்லாம் தி.மு.க அரசு முடக்கிவிட்டது.
மேலும், நாங்கள் கொண்டுவந்த திட்டங்களுக்கு தி.மு.க.,வினர் ஸ்டிக்கர் ஒட்டி உள்ளனர். மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, கட்டுமானப் பொருட்கள் உயர்வு என அனைத்து வகையிலையும் வரிகளை உயர்த்தி மக்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து மாயை ஏற்படுத்தி உள்ளனர்.
அப்போது என்ன விலைக்கு பொருட்களை வாங்கினார்கள்? ஆனால் இப்போது என்ன விலைக்கு வாங்குகிறார்கள்? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
காவல் துறையினர் யாரும் சரியாக வேலை செய்யவில்லை. கஞ்சா, போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துவிட்டது. இத்தகைய ஆட்சியை மக்கள் விரைவில் வீட்டுக்கு அனுப்புவார்கள்
இவ்வாறு எஸ்.பி.வேலுமணி பேசினார்.
இந்த நிகழ்வில் அதிமுக மாவட்டச் செயலாளர் அம்மன் கே.அர்ஜுனன், எம்.எல்.ஏ, கே.ஆர். ஜெயராம், மாணவரணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

