கோவை: கோவையில் விலை உயர்ந்த பைக் திருட்டு கும்பல் 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விலை உயர்ந்த 8 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவை மாநகரப் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிங்காநல்லூர் சுற்றுவட்டாரங்களில், பைக் திருட்டு சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறி வருகிறது.
பைக் திருட்டு கும்பலைப் பிடிக்க மாநகர காவல் ஆணையர் கண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் மாநகரப் பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தினர்.
அத்துடன் மாநகரப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இதில் 6 பேர் கொண்ட கும்பல் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
தொடர்ந்து அவர்கள் 6 பேரையும் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
திருட்டு கும்பல்
அதில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து, அவருடைய தம்பி இசக்கி, திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த தீபக், கோவை சின்னவேடம்பட்டி பகுதியைச் சேர்ந்த மனோஜ், திருச்சியைச் சேர்ந்த பார்த்திபன் மற்றும் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
இந்த ஆறு பேரும் வெள்ளக்கிணறு பகுதியில் வசித்து வந்துள்ளனர். சிங்காநல்லூர், போத்தனூர், ஆலந்துறை, அன்னூர், புளியம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் விலை உயர்ந்த பைக்குகளை குறிவைத்து திருடியது விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து அவர்கள் 6 பேரையும் கைது செய்த போலீசார், விலை உயர்ந்த 8 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கத்தி, ஒரு விலை உயர்ந்த செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். கைதான ஆறு பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

