கோவை: கோவை மற்றும் தமிழகம் முழுவதும் வீட்டிலிருந்தே வருமானம் தருவதாக கூறி மோசடி தொடர்ந்து அரங்கேறி வருவதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
மெட்ரோ நகரான கோவையில் நாளுக்கு நாள் பல்வேறு வகையான மோசடிகள் அரங்கேறி வருகின்றன. இணைய மோசடி, ஏடிஎம் மோசடி, பொருளாதார மோசடி என்ற வரிசையில் வீட்டில் இருந்தே வருமானம் என்ற பெயரிலும் தொடர்ந்து மோசடி அரங்கேறி வருகிறது.
Work from Home
வீட்டிலிருந்தே வருமானம், குறைந்த முதலீட்டில் அதிக லாபம், பெண்கள், இளைஞர்களுக்கு எளிய தொழில் வாய்ப்பு என்ற ஆசை வார்த்தைகளை முன்வைத்து கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் மோசடி அரங்கேறி வருகிறது.
இது மோசடி என்று தெரியாமலயே பலரும் தங்களது பணத்தை பறிகொடுத்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
இணையதளம், சமூக வலைதளங்கள், வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் கண்கவர் விளம்பரங்கள் மூலம் இத்தகைய மோசடி ஆசாமீகள் தங்களது கைவரிசையைக் காட்டி வருகின்றனர்.

குறிப்பாக வேலைவாய்ப்பு தேடி அலையும் இளைஞர்கள், வீட்டிலிருந்தே வருமானம் தேடும் பெண்கள், குறைந்த முதலீட்டில் சிறு தொழில் தொடங்க விரும்புபவர்கள் ஆகியோரை குறிவைத்து இந்த மோசடிகள் நடைபெறுகின்றன.
ஆசை காட்டி மோசடி
“ஒருவரை ஏமாற்ற அவரது ஆசையைத் தூண்ட வேண்டும்” என்ற திரைப்படத்தின் வசனத்திற்கு ஏற்ப,
“வீட்டிலிருந்தே மாதம் ரூ.20 ஆயிரம் முதல், ரூ.50 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம், ஒரு நாளுக்கு 2 மணி நேரம் வேலை செய்தால் போதும், நாங்கள் பயிற்சி தருகிறோம், மூலப்பொருட்கள் தருகிறோம், தயாரித்த பொருட்களை நாங்களே வாங்கிக் கொள்கிறோம்” என்ற வகையில் விளம்பரப்படுத்தி பொதுமக்களை நம்ப வைப்பதே இந்த மோசடி கும்பலின் முதற்கட்ட யுக்தி.
முன்பெல்லாம், காளான் வளர்ப்பு, மெழுகுவர்த்தி தயாரிப்பு உள்ளிட்ட பொருட்களை வைத்து இந்த மோசடியை அரங்கேற்றி வந்தவர்கள் தற்போது, வீட்டிலேயே செய்யக்கூடிய சிறு அளவிலான கைவினைப் பொருட்கள், பேக்கிங் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் போன்ற தொழில்களைச் சுற்றி வலம் வருகின்றனர்.
என்ன கூறுவார்கள்?
இதுகுறித்து ஏமார்ந்த பொதுமக்கள் நியூஸ் க்ளவுட்ஸ் கோயம்புத்தூரிடம் கூறியதாவது:-
மோசடிக்காரர்கள் முதலில், பயிற்சி வகுப்பு என்ற பெயரில் ரூ.3,000 முதல் ரூ.7,000 அல்லது ரூ.10,000 வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். சில இடங்களில் இதை ரெஜிஸ்ட்ரேஷன் கட்டணம், கிட் சார்ஜ், மூலப்பொருள் டெபாசிட், பயிற்சி பாதுகாப்புத் தொகை போன்ற வெவ்வேறு பெயர்களில் வசூலிக்கின்றனர். இதனால் இது நேரடி மோசடி என்று உடனடியாக பலருக்கும் சந்தேகம் வராமல் போகிறது.
உதாரணமாக, காளான் வளர்ப்பு பயிற்சி என்றால், “ஹோட்டல்கள் மற்றும் மார்க்கெட்டில் அதிக டிமாண்ட்”, “நாங்களே வாங்கிக் கொள்கிறோம்” என்று கூறி ஈர்க்கின்றனர். அதேபோல், மெழுகுவர்த்தி தயாரிப்பு என்றால், “வீட்டிலேயே பெண்கள் செய்யக்கூடிய எளிய தொழில்”, “திருமணங்கள், விழாக்கள், அலங்கார கடைகள் மூலம் நல்ல வருமானம்” என்று நம்ப வைக்கின்றனர்.
முதற்கட்டமாக சிறிய அளவில் பயிற்சி கொடுத்து, சில மூலப்பொருட்களையும் வழங்கி, நீங்கள் தயாரித்த பொருட்களை நாங்களே வாங்கிக் கொள்கிறோம் என்று உறுதி அளிப்பார்கள்.
நூதன மோசடி

இதன் மூலம் பொதுமக்கள் முழுமையாக நம்பிக்கை அடையத் தொடங்குகிறார்கள். முதல் முறை தயாரித்து கொடுக்கப்படும் பொருட்களை அவர்கள் ஏற்றுக்கொள்வதும், சில நேரங்களில் குறைந்த அளவில் பணமும் கொடுப்பதும் இந்த மோசடியின் மிக முக்கியமான பகுதி என கூறப்படுகிறது.
இதன் மூலமே பாதிக்கப்பட்டவர்கள், இது உண்மையான தொழில் வாய்ப்பு தான் என்று நம்பி மேலும் முதலீடு செய்யத் தொடங்குகிறார்கள். அதன்பிறகு தான் மோசடியின் உண்மையான முகம் வெளிப்பட ஆரம்பிக்கிறது.
கோவையில் உள்ள டாப் 6 சுற்றுலாத் தளங்கள்! Tourist spots near Coimbatore
இரண்டாவது முறை அல்லது மூன்றாவது முறை தயாரித்து கொடுக்கப்படும் பொருட்களில், தரமில்லை, அளவு சரியில்லை, கலவை தவறு, மார்க்கெட் ஸ்டாண்டர்டுக்கு பொருந்தவில்லை, பேக்கிங் சரியில்லை போன்ற பல்வேறு காரணங்களை கூறி பொருட்களை நிராகரிக்கிறார்கள்.
சில நேரங்களில், இந்த முறை மட்டும் ரிஜெக்ட்; அடுத்த முறை கவனமாக செய்யுங்கள் என்று கூறி மீண்டும் மூலப்பொருட்கள் வாங்க வைக்கிறார்கள்.
முரண்டு பிடிப்பவர்களிடம் மட்டும் 3 அல்லது 4 முறை வரை இதே யுக்தியை பயன்படுத்துவார்கள். ஒவ்வொரு முறையும் வேறு வேறு குறைகள் சொல்லி தயாரிப்பு பொருட்களை திருப்பி அனுப்பவோ அல்லது ஏற்க மறுக்கவோ செய்கிறார்கள். இதனால் ஏமாந்தவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
காலப்போக்கில், இந்த தொழில் நமக்குப் பொருந்தாது, நாம் சரியாக செய்ய முடியவில்லை என்ற மனநிலைக்கு பலர் தள்ளப்படுகிறார்கள்.

தொடர்ந்து நிராகரிப்பு, செலவழித்த பணம் திரும்ப வராத நிலை, வீட்டில் தேங்கிக் கிடக்கும் தயாரிப்புப் பொருட்கள், குடும்பத்தினரின் கேள்விகள் ஆகிய காரணங்களால், பலர் இறுதியில் அந்த தொழிலையே கைவிட்டு விடுகின்றனர். ஆனால் இது நேரடியாக மோசடி என்று பலருக்கும் உடனடியாக புரிவதில்லை.
என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.
பெண்களே கவனம்
இந்த மோசடி மூலம் செலுத்திய பயிற்சி கட்டணம், முதலீடு செய்த மூலப்பொருள் செலவு, கூடுதலாக வாங்கிய உபகரணங்கள், போக்குவரத்து செலவு, நேர இழப்பு ஆகிய அனைத்தும் ஒருவருக்கு நஷ்டமாகி விடுகிறது.
நேரடியாக பணத்தை பறித்துச் செல்லும் மோசடி போல இல்லாமல், தொழில் வாய்ப்பு, சுயதொழில், பெண்கள் முன்னேற்றம், கிராமப்புற வருமானம், வீட்டிலிருந்தே வேலை போன்ற நல்ல நோக்கங்கள் பின்னணியில் இருப்பது போல காட்டி, திட்டமிட்ட முறையில் ஏமாற்றுகின்றனர்.
இதுபோன்ற மோசடிகள் காளான் வளர்ப்பு, மெழுகுவர்த்தி தயாரிப்பு மட்டுமல்லாமல், சோப்பு தயாரிப்பு, அகர்பத்தி தயாரிப்பு, சாக்லேட் தயாரிப்பு, பேப்பர் கவர் தயாரிப்பு, அலங்காரப் பொருட்கள் தயாரிப்பு, பேக்கிங் வேலை, லேபிள் ஒட்டும் வேலை, வீட்டிலிருந்து assembling வேலை, ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலை, டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி என்ற பெயர்களிலும் நடைபெற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
சிலர் இலவச பயிற்சி என்று கூறி அழைத்து வைத்து, பின்னர் சான்றிதழ் கட்டணம், பிராக்டிகல் கட்டணம், ரா மெட்டீரியல் செலவு, மெம்பர்ஷிப் கட்டணம் போன்ற பெயர்களில் பணம் வசூலிக்கிறார்கள்.
சிலர், முதலீடு செய்தால் தான் பெரிய ஆர்டர் தர முடியும் என்று கூறி மேலும் அதிக தொகையைப் பெற முயற்சிக்கிறார்கள். இவ்வாறு ஆரம்பத்தில் சிறிய தொகை வசூலித்து, பின்னர் நம்பிக்கை உருவாக்கி, பெரிய அளவில் பணம் பறிப்பதும் நடக்கிறது.
கோவையில் உள்ள டாப் 5 Richest ஏரியாக்கள் எது தெரியுமா?
ஷேர் செய்யுங்கள்
தமிழகத்தில் குறிப்பாக வேலைவாய்ப்பு இல்லாமல் அவதிப்படும் இளைஞர்கள், குடும்பச் செலவுக்கு துணை நிற்க நினைக்கும் பெண்கள், ஓய்வு பெற்றவர்கள், வீட்டிலிருந்து கூடுதல் வருமானம் தேடும் நடுத்தர குடும்பத்தினர் ஆகியோர் இதுபோன்ற மோசடிகளில் அதிகமாக சிக்கிக் கொள்வதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே இதுபோன்ற மோசடி விளம்பரங்களை பார்த்தவுடன் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று News Clouds Coimbatore வலியுறுத்துகிறது.
இந்த விழிப்புணர்வு செய்தியை கோவை மற்றும் தமிழகம் முழுவதும் பரப்பி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்

