கோவை: மாற்றாக ஒரு அரசு அமைய வேண்டும் என்றால், வேறு ஏதாவது மாற்றுக் கட்சிக்கு வாக்கு அளித்தால் வாக்கு வீணாக போய்விடும் என்று தவெக.,வை மறைமுகமாக விமர்சித்துப் பேசியுள்ளார் கோவை வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன்.
தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி வேட்பாளரும், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட சங்கனூர் சாலையில் இன்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றால், மாற்றாக இருக்கக் கூடிய ஒரே ஒரு கூட்டணி அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மட்டும் தான். தி.மு.க ஆட்சி வந்தால், பெண் குழந்தைகளை வெளியில் அனுப்ப முடியாது என்று எல்லாருக்கும் தெரியும். போதையில் யார், எந்த நேரத்தில் எங்கு இருப்பார்கள் என்பது தெரியவில்லை.
சின்ன சின்னக் குழந்தைகள் எல்லாம் போதைக்கு மாறி வருகின்றனர். நாம் ஒட்டுமொத்த வருங்காலமே வீணாக போய்விடும். அதனால் இன்று தமிழகத்தில் இருக்கக் கூடிய மிக முக்கியமான பிரச்சனை என்பது பெண்களுடைய பாதுகாப்பும் மற்றும் போதைப்பொருள் பிரச்சனையும் ஆகும்.
ஓட்டு வீணாகும்
இதற்கு மாற்றாக ஒரு அரசு அமைய வேண்டும் என்றால், வேறு ஏதாவது மாற்றுக் கட்சிக்கு வாக்கு அளித்தால் வாக்கு வீணாக போய்விடும். மாற்றம் கொடுக்க வேண்டிய சூழலில், அந்த வாய்ப்பு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மட்டும் தான் இருக்கிறது.
எனக்கு உடல்நிலை சரி இல்லாததால் ரொம்ப நேரம் பேச முடியவில்லை. மன்னித்துவிடுங்கள்.
கரூர்காரர் பட்டி போட பார்க்கிறார். விடலாமா? விடக் கூடாது. அதனால் ஸ்டாலின் ஊழல் கறை படிந்த முன்னாள் அமைச்சரை அனுப்பி இருக்கிறார். ஸ்டாலினுக்கு எவ்வளவு வெறுப்பு இருக்கிறது.
வானதி சீனிவாசன் பேசிய வீடியோ
கோவையில் 10க்கு 10 எஸ்.பி. வேலுமணி ஜெயித்தார் என்பதற்காக, கரூரில் இருந்து கிரிமினல்களை கொண்டு வந்து நிறுத்துவாரா? அதற்கு சரியான பதிலடி தி.மு.க விற்கு கொடுத்தாக வேண்டும். இந்த முறை அவிநாசி தனித் தொகுதியும் சேர்த்து 11க்கு 11 ஜெயித்து காண்பிக்க வேண்டும் என்றார்.
இவ்வாறு வானதி சீனிவாசன் பேசினார்.


