இன்றைய காலத்தின் அவசியம் சத்குரு: புதுச்சேரியில் ‘கிருஷ்ண லீலா’ நூல் அறிமுக விழா

புதுச்சேரி: இன்றைய காலத்தின் அவசியம் சத்குரு என புதுச்சேரியில் நடைபெற்ற நூல் அறிமுக விழாவில் பேச்சாளர் இசைக்கவி ரமணன் புகழாரம் சூட்டினார்.

சத்குருவின் பார்வையில் கிருஷ்ணரின் பன்முகப் பரிமாணங்களை விளக்கும் வகையில் உருவாகியிருக்கும் ‘கிருஷ்ண லீலா’ எனும் புதிய நூல் அறிமுக விழா இன்று (ஏப்ரல் 25) புதுச்சேரி எஸ்.வி. படேல் சாலையில் உள்ள ஹோட்டல் ஸற்குருவில் நடைபெற்றது.

இவ்விழாவில் புதுச்சேரி இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் நடராஜன் புத்தகத்தை வெளியிட, ஹோட்டல் ஸற்குருவின் நிர்வாக இயக்குனர் அமர்நாத் பெற்றுக்கொண்டார். பிரபல கவிஞர் இசைக்கவி ரமணன் மற்றும் பேச்சாளர் இந்திரா விஜயலட்சுமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று, நூல் குறித்த தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து சிறப்புரை ஆற்றினர்.

Advertisement

கோவை ஈஷா யோக மையத்தில் கடந்த 2005-ம் ஆண்டு, கிருஷ்ணரின் வாழ்வை மையமாக வைத்து “லீலா” என்ற சிறப்பு நிகழ்ச்சியை சத்குரு வழிநடத்தினார். கிருஷ்ணர் தனது வாழ்வின் பல முக்கிய தருணங்களை எப்படி விளையாட்டுத்தனத்துடன் இலகுவாக கையாண்டார் என்பதை விளக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி சத்குருவால் வடிவமைக்கப்பட்டது.

அந்த லீலா நிகழ்ச்சியில் கிருஷ்ணரின் பல்வேறு பரிணாமங்கள் குறித்து சத்குரு ஆற்றிய உரைகளை, பிரபல எழுத்தாளர் ‘சுபா’ எழுத்தாக்கம் செய்தார். இது ‘ஈஷா காட்டுப்பூ’ மாத இதழில் 150-க்கும் மேற்பட்ட மாதங்கள் தொடராக வெளிவந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தத் தொடர் தற்போது புத்தக வடிவம் பெற்றுள்ளது. அதன் முதல் பாகம் இன்று புதுச்சேரியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

கிருஷ்ணர் குறித்து சத்குரு கூறுகையில், “கிருஷ்ணனை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், சமநிலை தவறாத மூளை, அதே சமயம் கண்மூடித்தனமாக உருகும் இதயம் இரண்டும் இருந்தால்தான் சாத்தியம்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இசைக்கவி ரமணன், “ஒரு தனி மனிதனுடைய ஆழ்ந்த ஆன்மீகக் கோரிக்கைக்கு ஏற்ப தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் குருவை நாம் ‘சத்குரு’ என்கிறோம். அந்த வகையில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, நாம் வாழ்கின்ற காலத்தின் அவசியம் என்று நான் நினைக்கிறேன்.

அதற்கு 2 காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, இன்றைய ஒட்டுமொத்த சமுதாயத்திற்கே இருக்கும் ஒரு நோய், ‘உணர்ச்சி ரீதியான பலவீனம்’ (Emotional Fragility). அதாவது உணர்ச்சிகள் நொறுங்கிப் போகும் தன்மையில் இருக்கின்றன. இதனை முறையாக கையாள ஜாதி, மதம், இனம், மொழி கடந்த ஒரு இயக்கம் தேவைப்படுகிறது. அதை பிராணாயாமத்தின் மூலமும், யோகத்தின் மூலமாகவும் கற்பிப்பதற்காக காலம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்ற மிகப்பெரிய கொடை, வரம் தான் ‘சத்குரு’ என நான் நினைக்கிறேன்.

இரண்டாவது, இன்றைக்கு நம்முடைய வரலாறு, நூல்கள் குறித்து ஆழமான அறிமுகம் இல்லாதவர்கள் முறையற்ற வகையில் கேள்விகளை கேட்கிறார்கள். இதற்கெல்லாம் யாரேனும் ஒருவர் நின்று நிதானமாகவும், தீர்மானமாகவும், துணிவோடும் பதில் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது. அந்த மிகப்பெரிய சேவையை சத்குரு செய்து வருகிறார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இதனாலேயே இன்றைய காலத்தின் அவசியம் சத்குரு என்கிறேன். நாளை வரும் காலத்தில்தான், அவர் இன்றைக்கு செய்திருக்கும் சேவையின் மகத்துவம் புரியும் என்று நம்புகிறேன்.”

இளைஞர்களிடையே குறைந்து வரும் வாசிப்புப் பழக்கம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “வாசிப்புப் பழக்கம் குறைவதற்கு பெற்றோர்களே முக்கியக் காரணம். வீட்டில் குழந்தைகளிடம் தமிழில் பேசுவதும், தமிழிலேயே சிந்திக்கும் சூழலை உருவாக்குவதும் அவசியம். தற்போது வந்துள்ள ‘ஆடியோ புத்தகங்கள்’ போன்ற நவீன தொழில்நுட்பங்கள், நேரமின்மையால் வாசிக்க முடியாதவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இது நவீன காலத்து வாசிப்பு முறையாக மாறிக் கொண்டிருக்கிறது” எனக் கூறினார்.

அவரைத் தொடர்ந்து பேச்சாளர் இந்திரா விஜயலட்சுமி பேசுகையில், “ரீல்ஸ் மற்றும் யூடியூப் போன்ற டிஜிட்டல் திரைகளுக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய இளைஞர்கள், புத்தக வாசிப்பின் அலாதியான சுகத்தை உணர வேண்டும். கிருஷ்ணர் யார் என்பதை ஆழமாகப் புரிந்துகொள்ள இந்த ‘கிருஷ்ண லீலா’ ஒரு மிகச்சிறந்த வழிகாட்டி” எனப் பேசினார்.

சத்குருவின் புத்தகங்கள் தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், ஸ்பானிஷ், ஜெர்மன், பிரெஞ்சு உள்ளிட்ட உலக மொழிகளிலும் 50-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்தப் புத்தகங்கள் இதுவரை உலகம் முழுவதும் 50 லட்சத்துக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளன.

சத்குருவின் படைப்புகளில் ‘இன்னர் இன்ஜினியரிங்’, ‘கர்மா’ ஆகிய நூல்கள் உலகப்புகழ்பெற்ற ‘நியூயார்க் டைம்ஸ் பெஸ்ட் செல்லர்’ பட்டியலில் இடம்பிடித்து சர்வதேச அளவில் சாதனை படைத்துள்ளன.

அந்த வரிசையில் தற்போது வெளிவந்துள்ள இந்த ‘கிருஷ்ண லீலா’ புத்தகம் தமிழகத்தின் அனைத்து முன்னணி புத்தகக் கடைகளிலும், பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ஈஷா லைஃப் போன்ற இணையதளங்களிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது. புதுச்சேரியைத் தொடர்ந்து அடுத்த மாதங்களில் திருச்சி, சென்னை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் சிறந்த தமிழ் அறிஞர்களைக் கொண்டு இந்த நூல் அறிமுக விழாக்கள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...