கோவை: ஆனைமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு, திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டம், ஆனைமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற வீடு புகுந்து திருட்டு சம்பவங்கள் தொடர்பாக காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, 4 பேரை கைது செய்து திருடப்பட்ட சொத்துக்களை மீட்டுள்ளனர்.
ஆனைமலை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இரண்டு தனித்தனி வீடு புகுந்து திருட்டு வழக்குகளில், மொத்தம் 4 பவுன் தங்க நகைகள், 4 கிலோ 120 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.40,000 ரொக்கம் திருடப்பட்டிருந்தது.
இவ்வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கண்டறியுமாறு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதன் பேரில், வால்பாறை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பவித்ரா அவர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர் சத்தியசீலன், உதவி ஆய்வாளர்கள் ஸ்டீபன், அனந்தகுமார், கிருஷ்ணமூர்த்தி மற்றும் காவலர்கள் அடங்கிய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டதுடன், சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டங்கள் குறித்தும் தனிப்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், ஆலாங்கடவு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்தின் பேரில் நான்கு நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் ஆனைமலை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வீடு புகுந்து திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது உறுதியானது.
கோடீஸ்வர முத்து (37), கோபி @ குட்லு (22), வேல்முருகன் (24),பேச்சிமுத்து (31), இவர்கள் நால்வரும் மதுரையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி நபர்களை கைது செய்த தனிப்படை காவல்துறையினர், அவர்களிடமிருந்து 4 பவுன் தங்க நகைகள், 4 கிலோ 120 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.25,000 ரொக்கம், திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கருவிகள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு பல லட்சம் ரூபாய் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், கைது செய்யப்பட்ட நால்வரும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டத்திற்கு புறம்பாக குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவும் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது சட்டவிரோத செயல்கள் குறித்து தகவல் தெரிந்தால், தயக்கமின்றி கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981 81212 அல்லது வாட்ஸ்அப் எண் 77081 00100 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்போரின் விவரங்கள் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.


