கோவை: மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஓடந்துறை வனப்பகுதியில் சுற்றித்திரியும் பிரபலமான “பாகுபலி” காட்டு யானை திடீரென ஆக்ரோஷமாக மாறி மரத்தை வேரோடு சாய்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஓடந்துறை வனப்பகுதியில் பிரம்மாண்டமான தோற்றத்துடன் காணப்படும் பாகுபலி காட்டு யானை, தினமும் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் ஓடந்துறை காட்டுப்பகுதியில் இருந்து நெல்லிமலை காட்டுப்பகுதிக்கு சென்று வருவது வழக்கம்.
பொதுவாக அமைதியாக மேட்டுப்பாளையம் – உதகை சாலையை கடந்து செல்லும் பாகுபலி யானை, நேற்று இரவு திடீரென ஆக்ரோஷமாக மாறியது. ஓடந்துறை – உதகை சாலையில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடை அருகே இருந்த மரத்தை வேரோடு தள்ளி சாய்த்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு பாகுபலி யானை உதகை சாலையை கடந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
வீடியோ காட்சிகள்
வழக்கமாக அமைதியாக காணப்படும் பாகுபலி காட்டு யானை திடீரென ஆக்ரோஷமாக நடந்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த காட்சிகளை சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த நிலையில், அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.


