கோவை : பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கோவையில் மாணவர்கள் பேரணி மற்றும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினத்தை முன்னிட்டு, கோவையில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஆண்டுதோறும் ஜூலை 3-ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழல், வனவிலங்குகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கோவை பந்தயசாலை பகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ராமகிருஷ்ணா பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை எடுத்துரைக்கும் வகையில் மாணவர்கள் நடனம், பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, “பிளாஸ்டிக்கிற்கு இல்லை என்று சொல்வோம் – மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணிப்பைகளை தேர்வு செய்வோம்”, “இன்றைய சிறிய மாற்றம் நாளைய சிறந்த எதிர்காலம்” உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்களை ஏந்தியபடி மாணவர்கள் பேரணியாகச் சென்று, பொதுமக்களிடம் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அவசியத்தையும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.


