உலக தாய்ப்பால் வாரம்; தான் பெற்றால் தான் குழந்தையா? கோவைக்கு பெருமை சேர்க்கும் தாய்மார்கள்

கோவை: உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, தாய்ப்பால் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையுள்ள குழந்தைகளுக்கும் ஒரு தாயாக மாறி, இந்த சேவையை தொடர்ந்து வழங்கி வரும் இளம் பெண்கள் குறித்த செய்தித் தொகுப்பை இங்கு காணலாம்.

உலக தாய்ப்பால் வாரம்

பொதுவாக மனிதர்கள் மற்றும் பாலூட்டும் உயிரினங்களுக்கு முதல் ஊட்டச்சத்தே தாய்ப்பால் தான். ஒரு குழந்தை பிறந்த 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே உணவாக இருக்கிறது. தாய்ப்பாலைத் தவிர்த்து வேறு எந்த உணவோ, நீராகாரமோ கொடுக்கக் கூடாது. தாய்ப்பால் குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சியை தூண்டும் சக்தி கொண்டது. குழந்தைகளை நோய்களில் இருந்து பாதுகாக்கத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் இயற்கையாகவே கொடுக்கிறது. இதன்மூலம், சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் வராமல் காக்கிறது. குழந்தைகளுக்கு எளிதில் செரிமானம் ஆகும் உணவாகவும் திகழ்கிறது.

Advertisement

அதுமட்டுமில்லாமல், தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்க்கும், சேய்க்கும் இடையேயான பிணைப்பு அதிகரிக்கும். குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பாலை கொடுக்க வேண்டும் என்பது உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலாகும். அதாவது, ஒரு நாளைக்கு குறைந்தது 10 முதல் 12 முறை தாய்ப்பால் கொடுக்கலாம்.

சத்தாண உணவு

Advertisement

குழந்தை பிறந்து 6 மாதங்களுக்கு தாய்ப்பாலை மட்டுமே நம்பியிருப்பதால், தாய் சத்தாண மற்றும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமாகும். வெந்தயம், முருங்கைக்கீரை மற்றும பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை சாப்பிட்டால் பால் உற்பத்தி அதிகரிக்கும். அதேபோல, பேரீச்சம்பழம் மற்றும் அத்திப்பழம் போன்ற தினசரி சாப்பிட்டாலும் தாய்க்கு பால் சுரப்பது பெருகும். மேலும், போதுமான அளவு குடிநீர், மோர் மற்றும் இளநீர் குடிப்பது தாய்ப்பால் அதிகரிப்பதற்சு ஏற்ற உணவுகளாகும்.

ஓமம், பாதாம்பருப்பு, எள் மற்றும் சுரைக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, இயற்கையாகவே ஹார்மோன்களை தூண்டி பால் உற்பத்தியை அதிகரிக்கும். அதேபோல, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், மன அழுத்தமில்லாமல், நன்கு தூங்குவது நல்லதாகும்.

4 லட்சம் குழந்தைகள்

சர்வதேச அளவில் பிறந்து 6 மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளில் 52 சதவீதம் முதல் 53 சதவீதம் வரை போதிய தாய்ப்பால் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, உலகளவில் 48 சதவீதம் குழந்தைகளுக்கு மேட்டுமே முதல் 6 மாதங்கள் வரை முழுமையான தாய்ப்பால் கிடைப்பதாக உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெஃப் அமைப்புகளின் தற்பாதைய அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

அதேபோல, பிறந்த ஒரு மணிநேரத்திற்குள் சர்வதேச அளவில் 46 சதவீத குழந்தைகளுக்கு மட்டுமே தாய்ப்பால் கிடைப்பதாகவும் அதிர்ச்சி புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பிறந்த 6 மாதங்கள் வரையிலான 52 சதவீத குழந்தைகளுக்கு தாய்ப்பால் பற்றாக்குறை அல்லது பவுடர் பால் போன்ற மாற்று உணவுகள் வழங்கப்படுகின்றன. இது அந்தக் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக உள்ளது.

இவை அனைத்திற்கும் மேலாக, தாய்ப்பால் பற்றாக்குறை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளினால் ஆண்டுதோறும் உலகளவில் 5 வயதுக்குட்ட 4 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கின்றனர். சொல்லப்போனால், தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகள், தொற்று நோய்களால் இறக்கும் ஆபத்து 14 மடங்கும் அதிகம் என்று சொல்லப்படுகிறது.

காரணம்

தாய்ப்பால் குறைவாக சுரக்கும் தாய்மார்கள், அதற்கு தீர்வு காண்பதை விட்டு விட்டு, தாய்ப்பாலுக்கு மாற்றாக விற்கப்படும் ஃபார்முலா மில்க் பவுடர்களை நம்புவதன் விளைவு தான். அதேபோல, குழந்தை பிறந்தவுடன் தாய்மார்களுக்கு சுரக்கும் சீம்பாலின் முக்கியத்துவம் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, போதிய பிரசவகால விடுப்பின்மை, வேலை செய்யும் இடங்களில் தாய்ப்பால் புகட்டுவதற்கான அறை இல்லாதது போன்ற காரணங்களும் உலகளவில் தாய்ப்பால் ஊட்டுவது தடைபடுவதற்கு முக்கிய காரணங்களாகும்.

குழந்தைகளுக்கு பாதிப்பு

போதிய தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் குறையும். ஏனெனில் தாய்ப்பாலில் இயற்கையாகவே ஆன்டிபாடிகள் உள்ளன. எனவே, நிமோனியா, வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற நோய்த் தொற்றுகள் எளிதில் ஏற்படுகின்றன. குறிப்பாக, குழந்தைகளின் ஐக்யூ (IQ) திறன் பாதிக்கப்படும். நரம்பு மண்டல வளர்ச்சி குறையும். அதுமட்டுமில்லாமல், உடல்பருமன், சர்க்கரை நோய் மற்றும் ஆஸ்துமா போன்ற நீண்ட கால நோய்களிலும் குழந்தைகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும்.

தாய்ப்பால் வாரம்

கடந்த 1992ம் ஆண்டு உலக தாய்ப்பால் செயல் கூட்டமைப்பால், உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெப் ஆகியவற்றுடன் இணைந்து தொடங்கப்பட்டது தான் உலக தாய்ப்பால் வாரம். ஆண்டுதோறும், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 7ம் தேதிவரை அனுசரிக்கப்படுகிறது. சுமார் 120 நாடுகளில் இது அனுசரிக்கப்படுகிறது.இந்தாண்டு “Breastfeeding for a Sustainable Start in Life: Strengthen What Works” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் சார்பில் போஷன் அபியான் மற்றும் சுகாதாரத்துறையின் மூலம் அங்கன்வாடிகள் மற்றும் மருத்துவமனைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் கிராமப்புறங்களில் உள்ள தாய்மார்களுக்கு தாய்ப்பால் புகட்டுவதன் முக்கியத்துவம் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

தெற்காசியா பெஸ்ட்

பிராந்திய வாரியாக எடுத்துக் கொண்டால், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பூடான், மாலத்தீவு, நேபாளம் போன்ற தெற்காசிய நாடுகளில் தான், குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் விகிதம் அதிகமாக உள்ளது. அதாவது, 57 சதவீதம் முதல் 60 சதவீதம் தாய்மார்கள் பாலூட்டுகின்றனர். ஆனால், வட அமெரிக்கா நாடுகளில் இந்த விகிதம் அப்படியே குறைவாகக் காணப்படுகிறது. வெறும் 26 சதவீதம் தாய்மார்களே குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுகின்றனர்.

யுனிசெஃப் ஆய்வின்படி, அதிகளவில் தாய்ப்பால் ஊட்டும் நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

ருவாண்டா – சுமார் 86.9 சதவீத தாய்மார்கள் தாய்ப்பால் ஊட்டுகின்றனர்.

புருண்டி – சுமார் 83.3 சதவீத தாய்மார்கள் தாய்ப்பால் ஊட்டுகின்றனர்.

இலங்கை – சுமார் 82 சதவீத தாய்மார்கள் தாய்ப்பால் ஊட்டுகின்றனர்.

சாலமன் தீவுகள் – 76.2 சதவீத தாய்மார்கள் தாய்ப்பால் ஊட்டுகின்றனர்.

வனுவாட்டு – 72.6 சதவீத தாய்மார்கள் தாய்ப்பால் ஊட்டுகின்றனர்.

தாய்ப்பால் தானம்

வைட்டமின்கள், இன்சுலின், தைராய்டு மாத்திரை போன்ற எந்தவித மருந்துகளும் உட்கொள்ளாத தாய்மார்கள் தாய்ப்பாலை தானம் தரலாம். அவ்வாறு பெறப்படும் தாய்ப்பால்கள், தாய்ப்பால் வங்கியில் சேகரிக்கப்பட்டு, பற்றாக்குறையுள்ள குழந்தைகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. உலகளவில் தாய்ப்பாலை தானம் தரும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் இதுபோன்ற நல்ல உள்ளம் கொண்ட பெண்களும் உள்ளனர்.

குறிப்பாக தமிழகத்திலும் சாதனை புத்தகங்களில் இடம்பெறும் அளவுக்கு தாய்ப்பால் தானம் செய்த பெண்கள் உள்ளனர். நமது அண்டை மாவட்டமான திருப்பூர் அவிநாசியைச் சேர்ந்த ரூபா செல்வநாயகி என்பவர், அமிர்தம் பவுண்டேஷன் என்ற அமைப்பை துவங்கி, கடந்த 2017ம் ஆண்டு முதல் திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் வழங்கி வருகிறார். இதற்காக, தாய்ப்பால் தானம் தர முன்வந்த தாய்மார்களை ஒருங்கிணைத்து இந்த சேவையை வழங்கி வருகிறார்.

தாய்ப்பால் தானம் வழங்குவதில் இந்தியா புக் ஆப் ரெக்கார்டு மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்டில் இளம் தாய்மார்கள் இடம்பிடித்துள்ளனர்.

கோவைக்கு பெருமை

கோவையைச் சேர்ந்த சிந்து மோனிகா என்பவர் 42 லிட்டர் தாய்ப்பால் தானம் வழங்கி இந்தியா புக் ஆப் ரெக்கார்டு மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்டில் இடம்பிடித்துள்ளார். அதேபோல, கோவையைச் சேர்ந்த ஸ்ரீவித்யா 103 லிட்டர் தாய்ப்பால் தானம் வழங்கி சாதனை படைத்துள்ளார். செங்கல்பட்டைச் சேர்ந்த தாமரைச் செல்வி 157 லிட்டரும், திருச்சியைச் சேர்ந்த செல்வ பிருந்தா என்பவர் 22 மாதங்கள் 300 லிட்டர் வரை தாய்ப்பால் தானமாக வழங்கி பெருமை சேர்த்துள்ளார்.

தன்னுடைய குழந்தைகள் மட்டுமல்லாது தாய்ப்பால் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையுள்ள குழந்தைகளுக்கும் ஒரு தாயாக மாறி, இந்த சேவையை தொடர்ந்து வழங்கி வரும் இளம் பெண்களுக்கு, இந்த தாய்ப்பால் வாரத்தில் நமது Newsclouds Coimbatore சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வோம்.

Amazon Link 3
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை: கோவையில் வாடிக்கையாளர் போல் வந்து ஐபோனை திருடி சென்ற பெண் மீண்டும் செல்போனை திருப்பி ஒப்படைத்தார். கோவை மாநகர், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் முன்பு உள்ள செல்போன் கடை ஒன்றில் கடந்த...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை: கோவையில் வாடிக்கையாளர் போல் வந்து ஐபோனை திருடி சென்ற பெண் மீண்டும் செல்போனை திருப்பி ஒப்படைத்தார். கோவை மாநகர், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் முன்பு உள்ள செல்போன் கடை ஒன்றில் கடந்த...