கோவை: கோவை இடையார் வீதியில் மாட்டு வண்டி மீது பைக் மோதிய விபத்தில் ஈரோட்டை சேர்ந்த 29 வயது வாலிபர் மனோஜ்குமார் உயிரிழந்தார்.
கோவை இடையார் வீதி பகுதியில் மாட்டு வண்டி மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி, சலைப்புதூர் அஞ்சல், சென்னாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் (29). இவர் நேற்று அதிகாலை 4 மணியளவில் கோவை இடையார் வீதி, தெலுங்கு வீதி சந்திப்பு அருகே தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, எதிரே வந்த மாட்டு வண்டி மீது எதிர்பாராத விதமாக மனோஜ்குமார் ஓட்டி வந்த பைக் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார்.
உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் மனோஜ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மனோஜ்குமார் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





