கோவை: கோவை மாவட்ட நீதிமன்றங்களில் தேசிய அளவிலான லோக் அதாலத் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், மதுக்கரை மற்றும் அன்னூர் நீதிமன்ற வளாகங்களிலும் வருகிற 13ம் தேதி (சனிக்கிழமை) தேசிய அளவிலான லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
இதில், ஏற்கனவே நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில், சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கி கடன், கல்வி கடன் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், விவாகரத்து தவிர்த்து மற்ற குடும்ப பிரச்னைகள் தொடர்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள் நிலம், சொத்து, பாகப் பிரிவினை, வாடகை விவகாரங்கள், விற்பனை, வருமானம் மற்றும் சொத்து வரி பிரச்னைகள் போன்ற வழக்குகள் விசாரித்து சமரசமாக முடிக்கப்படும்.
மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்து கொள்ளும் வழக்குகளுக்கு மேல் முறையீடு கிடையாது. மேலும், மக்கள் நீதிமன்றம் மூலம் முடித்து கொள்ளப்படும் வழக்குகளுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் முழுமையாக திருப்பி தர வாய்ப்பு உள்ளது. நுகர்வோர் நீதிமன்ற வழக்குகள் மற்றும் கடன் வசூல் வழக்குகளுக்கும் இந்த மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்படும்.
மேலும், இதுபோன்ற வழக்குகளுக்கு தீர்வு எட்ட, கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வருகிற 1ம் தேதி முதல் மாவட்ட நீதிபதிகள் தலைமையில் சிறப்பு அமர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு, கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



