தன்னுடைய படங்களுக்கு நீண்ட இடைவெளி இருப்பதற்கான காரணத்தை கூறிய இயக்குனர் மீரா கதிரவன்

கோவை: புதுமுகங்களை வைத்து தரமான படங்களை உருவாக்குவதற்கு நீண்ட கால காத்திருப்பும், தயாரிப்பாளர்களின் ஆதரவும் தேவைப்படுகிறது, அதனால் தான் எனது படங்களுக்கு இடையே அதிக இடைவெளி ஏற்படுகிறது என்று ஹபீபி பட இயக்குனர் மீரா கதிரவன் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் கஸ்தூரிராஜா மற்றும் புதுமுகங்கள் நடிப்பில், மீரா கதிரவன் இயக்கத்தில் ஹபீபி திரைப்படம் உருவாகியுள்ளது.

Advertisement

இப்படக்குழுவினர் இன்று கோவையில் உள்ள ப்ரோசோன் மாலில் ரசிகர்களுடன் இணைந்து திரைப்படத்தைப் பார்வையிட்டனர்.

பின்னர் ரசிகர்களுடன் கலந்துரையாடினர். அப்போது தழுதழுத்த குரலில் பேசிய ரசிகர்கள் படத்தை வரவேற்பதாக நெகிழ்ச்சி தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது திரைப்படத்தின் இயக்குநர் மீரா கதிரவன் கூறியதாவது:-

ஆரம்பத்தில் இந்த படம் வெற்றி பெறுமா என்ற பல கேள்விகள் இருந்தன. ஆனால் மக்கள் தங்களின் அன்பின் மூலம் அந்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளனர். எங்கு சென்றாலும் உணர்வுபூர்வமாக படம் குறித்து பேசுகிறார்கள். அது மனதை நெகிழச் செய்கிறது.

Advertisement

ஒவ்வொரு குடும்பத்தின் கதையாகவே இந்தப் படத்தை மக்கள் பார்க்கின்றனர். இந்த படத்திற்காக காத்திருந்ததாகவும் பலர் கூறுகின்றனர். நாங்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் மக்களின் இந்த அன்பில் மறைந்து விட்டன.

படம் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்த்தோம். ஆனால் அதையும் தாண்டிய வரவேற்பை மக்கள் கொடுத்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் நேர்மறையான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

புதுமுகங்களை வைத்து தரமான படங்களை உருவாக்குவதற்கு நீண்ட கால காத்திருப்பும், தயாரிப்பாளர்களின் ஆதரவும் தேவைப்படுகிறது. அதனால் தான் எனது படங்களுக்கு இடையே அதிக இடைவெளி ஏற்படுகிறது. மக்கள் கூட இதுபோன்ற படங்களை எடுக்க இடைவெளி எடுத்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர்.

ஆரம்பத்தில் கணிசமான திரையரங்குகள் கிடைத்தன. தற்போது டிக்கெட் முன்பதிவும் அதிகரித்து வருகிறது. இந்த படத்திற்கு தணிக்கைக் குழு எந்த ஒரு காட்சியையும் நீக்கவில்லை. முழுமையாக பார்த்த தணிக்கைக் குழுவினர் இது ஒரு சுத்தமான குடும்பப் படம் என்று பாராட்டினர். இது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான படம் அல்ல.

எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் கஸ்தூரி ராஜா. ஆனால் இந்த படப்பிடிப்பில் அவர் ஒரு நடிகராக மட்டுமே செயல்பட்டார். படப்பிடிப்பு தளத்தில் இதுவரை ஒரு முறை கூட மானிட்டரை பார்க்கவில்லை. அவருடைய வாழ்க்கை அனுபவங்களில் சிலவற்றை இந்த கதாபாத்திரத்தில் பயன்படுத்தியுள்ளேன்.

என்று கூறினார்.

இதையடுத்து கஸ்தூரி ராஜா கூறுகையில்,

“இந்த படத்தில் இயக்குநர் சொன்னதை மட்டுமே செய்துள்ளேன். ஏற்கனவே நான்கு குழந்தைகளுக்கு தந்தையாக வாழ்ந்து வருவதால், படத்தில் இடம்பெறும் பல சம்பவங்கள் எனது வாழ்க்கையுடன் ஒத்துப்போனது. அதனால் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது சிரமமாக இல்லை. இயக்குநர் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிகத் துல்லியமாக வடிவமைத்திருந்தார். அதனால் நாங்களால் எதையும் மிகைப்படுத்தத் தேவையில்லை. படத்தில் நடித்துள்ள புதுமுகங்கள் கூட என்னைவிட சிறப்பாக நடித்துள்ளனர். இனிமேலும் இதுபோன்ற கதாபாத்திரங்கள் கிடைத்தால் தொடர்ந்து நடிக்கத் தயாராக உள்ளேன்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் ராம் பேசுகையில், “இந்த படத்தை எடுப்பதற்கும், முடிப்பதற்கும், வெளியிடுவதற்கும் பல்வேறு தடைகள் இருந்தன.

இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் பேசும் படம் அல்ல. தமிழர்களின் வாழ்வியலை பதிவு செய்யும் திரைப்படம்.

படத்தின் இயக்குநர் பலரிடம் நிதி திரட்டி, போராட்டத்துடன் இந்த படத்தை முடித்துள்ளார். தமிழ் சினிமா ரசிகர்கள் மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. கடந்த பல தசாப்தங்களாக அதை மக்கள் நிரூபித்து வருகின்றனர். இந்த படத்திற்கும் ரசிகர்கள் நல்ல ஆதரவு அளித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்திராத ஒரு அனுபவத்தை இந்த படம் வழங்கும்.

நமக்கு மிகவும் பரிச்சயமான காதலையும் உணர்வுகளையும் இந்த படம் பேசுகிறது. அதனால் இந்த படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்” என்றார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...