கோவை: வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை அறிவித்தால் 251 சமுதாயத்தினர் எதிர்ப்போம் என ஓபிசி மக்கள் உரிமை கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
கோவையில் ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி தலைவர் இரத்தினசபாபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுய அவர் இந்த செய்தியாளர் சந்திப்பு இட ஒதுக்கீடு சம்பந்தமானது என்றார். புதிய அரசு வந்தவுடன் பாமக அன்புமணி ராமதாஸ் அரசியல் முக்கியத்துவம் பெற வேண்டும்.
அரசியல் லாபம் பெற வேண்டும் என்பதற்காக சாதிவாரி கணக்கெடுப்பு சர்வ சமுதாய கூட்டம் என்ற ஒரு கூட்டத்தை சென்னையில் நடத்தினார், அதில் பல சமுதாயங்கள் அழைக்கப்படவில்லை சிலர் சமுதாயங்கள் அழைப்பு விடுத்தும் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்தார். அந்த கூட்டத்தில் 10.5% இட ஒதுக்கீட்டை எதிர்த்து நீதிமன்றம் சென்ற அனைத்து அமைப்புகள் சமுதாயங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் கூறினார்.
சாதிவாரி கணக்கெடுப்பு என்ற பெயரில் அன்புமணி ராமதாஸ் நடத்திய கூட்டத்தில் பெரும்பாலும் 10.5% இட ஒதுக்கீடு அல்லது வன்னியர் தனி இட ஒதுக்கீடு தான் பேசபட்டதாக தெரிவித்தார். இட ஒதுக்கீடு என்பதை மக்கள் தொகை கணக்கெடுப்பு படி கொடுக்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் முற்றிலும் மாறான கோரிக்கைகள் அதில் முன் வைக்கப்பட்டதாகவும் சாடினார்.
மேலும் தவெக மூத்த அமைச்சர் ஒருவர் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு அறிவித்தால் அவருக்கு லாபம் கிடைக்கும் என்று அதில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
தவெகவிற்கு நான்கு எம்எல்ஏக்கள் தற்பொழுது தேவைப்படும் நிலையில் எதிர்காலத்தில் பாமக உதவியும் தேவைப்படலாம் அதற்காக அன்புமணி ராமதாஸின் கோரிக்கையை பரிசீலித்து இந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே அதற்கான அறிவிப்பை அறிவிக்கும் அபாயம் உள்ளது என்று தெரிவித்தார்.
252 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் இருப்பதாகவும் அதில் வன்னியர் சமுதாயத்திற்காக மட்டும் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து பேசி வருகிறார் என்றும் கூறிய அவர் சிவி சண்முகம் வன்னியர் தனி இட ஒதுக்கீட்டில் அதிமுகவில் இருந்த பொழுது உச்சநீதிமன்றத்தில் தனி இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக வழக்கு தொடுத்தார் வேல்முருகனும் வழக்கு தொடுத்தார் என்று தெரிவித்தார்.
வன்னியர் சமூகத்தில் அரசியலில் உள்ளவர்கள் அரசியல் லாபத்திற்காக செயலாற்றி வருகிறார்கள் என்று சாடினார். ஒரு சமூகத்திற்கு தனி இட ஒதுக்கீடு தரப்பட்டது குறித்து நீதிமன்றம் முற்றிலும் தவறு என்று தீர்ப்பு கொடுக்கப்பட்டாலும் உச்சநீதிமன்றம் தங்களுக்கு சொல்லிவிட்டது என்று தவறாக முதல்வரை வழிநடத்துகிறார்கள் என்று தெரிவித்தார்.
மாநில அரசு சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர் கர்நாடகா ஆந்திரா போன்ற மாநிலங்களில் கூட சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது என கூறிய அவர் தமிழ்நாடு அரசு அதனை செய்து எத்தனை பேர் அரசு வேலைகளில் இருக்கிறார்கள்? எத்தனை பேர் தொழில் முனைவோர்களாக இருக்கிறார்கள்? எத்தனை பேர் பட்டதாரிகளாக இருக்கிறார்கள்? அவர்களுக்கு அரசு என உதவி செய்திருக்கிறது? என்பதை எல்லாம் அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
யார் யார் உண்மையில் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்களோ அரசு எடுக்கும் கணக்கெடுப்பின்படி தரவுகளின்படி இட ஒதுக்கீடு தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கூட்டணிக்கு செல்லலாம் என்று இருப்பவர்களும் கூட்டணிக்கு சென்றவர்களும் தங்களுடைய சாதிக்கு இட ஒதுக்கீடு என்று கூற ஆரம்பித்து விட்டார்கள், இட ஒதுக்கீடு கொடுக்கலாம் ஆனால் அதனை முறைப்படி சரியான தரவுகள் எடுத்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
முதல்வரை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும் இது குறித்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமாரிடமும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர் முந்தைய முதல்வர் பல சமயம் நேரம் கேட்டும் ஒரே ஒரு முறை தான் நேரம் கொடுத்தார் அப்படி இருக்கும் பொழுது இந்த முதல்வராவது தங்களுக்கு நேரம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
ஒரே ஒரு சமூகத்திற்கு மட்டும் இட ஒதுக்கீடு கொடுத்தால் தமிழகத்தில் உள்ள 251 சமுதாயத்தினரும் தீவிரமான செயல்பாடுகளில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார். தமிழக அரசு அதிகமான காலிப் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருக்கிறது.
அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்க ஆண்டு வருமானம் 2.5 லட்சம் என வரம்பு உள்ள நிலையில் மத்திய அரசு 8 லட்சம் ரூபாய் உற்சவரம்பை நிர்ணயித்துள்ளது அதனை மாநில அரசும் அவ்வாறு மாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கோவையின் பொறுப்பு அமைச்சரும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரையும் இரண்டு தினங்களுக்கு முன்பு சந்தித்ததாகவும், இந்த விஷயம் முன்னாள் அமைச்சர்கள் அமைச்சருக்கே சரியாக புரியவில்லை எடப்பாடியார் ஆட்சியில் அமைச்சரை பார்க்கும் பொழுது எப்படி 10.5 சதவிகிதம் கொடுக்கப்பட்டது என்று கேட்டோம், அம்பாசங்கர் அறிக்கையே தவறான அறிக்கை என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது பற்றி எடுத்துரைக்கும் போது அதெல்லாம் தங்களுக்கு தெரியாது மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அவற்றை சரி செய்து விடுவோம் என்று கூறினார்கள் என்று தெரிவித்தார்.
தவறான அறிக்கையால் கடந்த 40 ஆண்டுகளாக 15 சதவிகிதம் சென்றுள்ளார்கள் தேவர், கள்ளர், மல்லர் என்று அனைவரும் சேர்த்தியே ஆறு சதவிகிதம் தான் உள்ளார்கள் என்றும் தெரிவித்தார். 20 சமுதாயத்தினரில் ஒருவருக்கு கூட அரசு சீட் கிடைக்கவில்லை என்றும் ஆனால் அதிகமான வேலை வாய்ப்புகளை பெற்றவர்கள் வன்னியர் சமூகத்தினர் தான் என்றும் தெரிவித்தார்.


