கோவை: கோவையில் எஸ்.பி. வேலுமணியை ‘துரோகி’ என்று அழைத்த அதிமுக தொண்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக அரசியலின் மேற்குமண்டல கோட்டையான கோவையில், அதிமுகவின் “இரட்டைத் தூண்கள்” என்று வர்ணிக்கப்படும் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகிய இருவருக்கும் இடையே அசைக்க முடியாத உள்கட்சி விரிசல் ஏற்பட்டிருப்பது இன்று பொதுவெளியில் அம்பலமாகியுள்ளது.
பொள்ளாச்சியில் நடைபெற்ற துக்க நிகழ்வு ஒன்றில் பங்கேற்க வந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை, அங்கு இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் “துரோகி” என முழக்கமிட்டுப் புறக்கணித்த சம்பவமும், அவரை எடப்பாடி பழனிசாமி ஓரம் கட்டிய நிகழ்வும் தமிழக அரசியல் மற்றும் அதிமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் மூத்த தலைவரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமனின் தாயார் கடந்த மே மாதம் 15-ஆம் தேதி வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார். இதனையொட்டி, அவரது குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறுவதற்காக அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி (EPS) நேற்று பொள்ளாச்சிக்கு வருகை தந்தார்.
ஆறுதல்
அவருக்கு முன்னதாகவே, அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான எஸ்.பி. வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டிற்கு வந்து ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார். சமீபத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சிக்குச் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆதரவு தெரிவிப்பதாக எஸ்.பி. வேலுமணி எடுத்த தனிப்பட்ட நிலைப்பாடு, அதிமுக தலைமைக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
வேலுமணியின் இந்த அதிரடி மாற்றம் அதிமுகவை மீண்டும் இரண்டாகப் பிளக்கும் என தொண்டர்கள் இடையே கடும் அதிருப்தி நிலவி வந்தது. இதனிடையே, பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டின் முன்பு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் திரண்டிருந்தனர்.
துரோகி
அப்போது அங்கு நின்றிருந்த எஸ்.பி. வேலுமணியைப் பார்த்த தொண்டர்கள், கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி, பொதுவெளியில் அவரை “துரோகி… துரோகி…” என ஆக்ரோஷமாக முழக்கமிட்டு அடையாளப்படுத்தினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த எஸ்.பி. வேலுமணி, தொண்டர்களின் இந்தச் செயலுக்குப் பொதுஇடத்திலேயே தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தார்.
அந்த வீடியோ காட்சிகள்
இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு இடையே அங்கு வந்த எடப்பாடி பழனிசாமி, பொள்ளாச்சி ஜெயராமன் தாயாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். எப்போதும் எஸ்.பி. வேலுமணியும், எடப்பாடி பழனிசாமியும் அனைத்து அரசியல் மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும் இணைந்தே வலம் வருவது வழக்கம். ஆனால், இந்த அஞ்சலி நிகழ்வில் எஸ்.பி. வேலுமணி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டார்.
கோவையில் நாளை எங்கெல்லாம் மின்தடை?
பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டின் ஒரே அறைக்குள் எடப்பாடி பழனிசாமியும், எஸ்.பி. வேலுமணியும் அருகருகே இருந்தும் கூட, எடப்பாடி பழனிசாமி அவரைத் திரும்பிப் பார்க்காமல் முற்றிலுமாக ஓரம் கட்டினார். எஸ்.பி. வேலுமணி முதன்மைப்படுத்தப்படாமல், எடப்பாடி பழனிசாமியின் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களுக்குப் பின்னால் சாதாரணத் தொண்டரைப் போல ஓரம் தள்ளப்பட்டு நின்றது அங்கு கூடியிருந்த மூத்த அதிமுக தலைவர்களையே அதிருப்தி அடையச் செய்துள்ளது.

தள்ளுமுள்ளு
வெளியே தொண்டர்கள் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராகக் கூச்சலிட்டுப் பதற்றத்தை ஏற்படுத்தியதை அங்கு நின்றிருந்த ஊடகச் செய்தியாளர்கள் தங்களது கேமராக்களில் நேரலையாக ஒளிப்பதிவு செய்ய முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த வேலுமணியின் ஆதரவாளர்கள் மற்றும் சில அதிமுகவினர், செய்தியாளர்களைத் தடுத்து நிறுத்தி, அவர்களின் கேமராக்களைப் பறித்து உடைக்க முயன்றனர்.
இதனால் செய்தியாளர்களுக்கும், கட்சியினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதிமுக ஏற்கனவே ஓ.பி.எஸ்., டி.டி.வி. எனப் பிரிந்து கிடக்கும் நிலையில், தற்போது கட்சியின் தூணாகக் கருதப்படும் எஸ்.பி. வேலுமணியே எடப்பாடி பழனிசாமியால் பகிரங்கமாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பது, அதிமுகவுக்குள் அடுத்த “உள்நாட்டுப் போரை” அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


