Breaking News: கோவை மாநகராட்சிப் பள்ளியில் மதிய சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கவுண்டம்பாளையம் ஹவுசிங் யுனிட் அருகே மாநகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இதனிடையே அப்பள்ளியில் இன்று மதிய சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக மாணவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவத்தால் பெற்றோர்கள் அச்சமடைந்தனர். பள்ளி அருகே போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில்,
“30 ஆண் குழந்தைகள், 13 பெண் குழுந்தைகள் பாதிப்படைந்துள்ளனர். இரவு 9 மணி வரை மாணவர்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்கள். அனைவரும் நலமாக உள்ளனர். உணவில் பல்லி விழுந்ததாக சொல்லும் நிலையில் விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டு உள்ளது.
பணியாளர் கவனக்குறைவா என்பதை விசாரணை முடிவில் தான் சொல்ல முடியும். 44 மாணவர்கள் உணவருந்தி உள்ளனர். 5 மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். பள்ளியில் உள்ள உணவு கூடத்தில் ஆய்வு செய்யப்படும். இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் சர்குலர் அனுப்படும். என்ன நடந்தது என விசாரணை முடிந்து தெரிவிக்கிறேன்.” என்றார்.

