கோவை: விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த ஊட்டி போலீஸ் ஏட்டு திடீரென உயிரிழந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் கேத்தி பகுதியைச் சேர்ந்த பிரதீப் குமார் (37), ஊட்டி ஆயுதப்படையில் ஏட்டாக பணியாற்றி வந்தார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணிக்காக அன்னூருக்கு சென்று திரும்பும் போது விபத்தில் சிக்கிய அவர், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுமார் 8 மாதங்கள் சிகிச்சை பெற்றார்.
அதன்பின்னரும் உடல்நிலை பாதிப்பு இருந்து வந்ததால், துடியலூர் அருகே வடமதுரை குமரன் நகரில் தங்கி அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இருமல் மற்றும் மூச்சுத்திணறல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார்.
இரவு நேரத்தில் திடீரென உடல்நிலை மோசமடைந்ததால், குடும்பத்தினர் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், சரியான சிகிச்சை அளிக்கவில்லை என குற்றம்சாட்டி கோவை அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் சமாதானம் செய்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.


