கோவை: தேர்தல் முடிவடைந்த நிலையில், தேர்தல் நன்நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, பொதுமக்களும், வேட்பாளர்களும் கட்டாயமாக பின்பற்ற வேண்டிய பல முக்கிய விதிகள் அமலில் இருக்கும். தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்த விதிகளின்படி, அரசு இயந்திரங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படக் கூடாது. புதிய திட்டங்களை அறிவிப்பதும், நிதி ஒதுக்கீடுகளை வெளியிடுவதும் தடை செய்யப்படும். பொதுமக்களை கவரும் வகையில் பணம், பொருட்கள், பரிசுகள் வழங்குவது முற்றிலும் தடைசெய்யப்பட்டும். மதம், ஜாதி, மொழி போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு வாக்குகளை கோருவதும் சட்டவிரோதமாகக் கருதப்படும்.
மேலும், பிரச்சார கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தும்போது போலீசாரின் அனுமதி பெறுவது அவசியம், மீடியா மற்றும் சமூக வலைதளங்களிலும் தவறான தகவல்கள் பரப்புவது கடுமையாகக் கண்காணிக்கப்படும்.
அதிகபட்ச ரொக்கம்
முக்கியமாக ரூ.50,000க்கும் மேல் பணத்தை ரொக்கமாக கொண்டு சென்றால் கையில் அதற்குரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். இலையென்றால் தேர்தல் பறக்கும் படையினர் அதனை பறிமுதல் செய்ய உரிமை உள்ளது.
இந்த விதியினால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து பொதுமக்கள் சிலரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். காய்கறி விற்பனை செய்பவர்கள், விஷேசத்திற்காக துணி எடுக்கச் சென்றவர்களின் பணம் கூட பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நேற்று முடிவடைந்த நிலையில், இந்த விதிகள் தளர்த்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் திரும்பப்பெறப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.


