விஜய் குறித்து விமர்சித்து வரும் பிரபல இசையமைப்பாளரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் விஜய் குறித்து தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வந்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தொடர்பாக பரபரப்பை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அவரது காரின் கண்ணாடி மர்மநபர்களால் உடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி, சமூக வலைதளங்களில் இது குறித்து தீவிரமான விவாதம் நடைபெற்று வருகிறது.
ஜேம்ஸ் வசந்தனின் இசை பயணம்
தமிழ் சினிமாவில் சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜேம்ஸ் வசந்தன், தனது முதல் படத்திலேயே தனித்துவமான இசை மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். குறிப்பாக “கண்கள் இரண்டால்” போன்ற மெலோடி பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இதனைத் தொடர்ந்து பசங்க, நாணயம், ஈசன், விழா உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்து தனது திறமையை நிரூபித்தார். “ஒரு வெட்கம் வருதே” போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்களின் நினைவில் நிலைத்திருக்கின்றன.
இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், பாடலாசிரியர், இயக்குநர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல துறைகளில் தனது முத்திரையை பதித்துள்ளார். தற்போது தமிழோடு விளையாடு என்ற கல்வி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி அறிவியல் மற்றும் மொழி திறன்களை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டைப் பெற்று வருகிறது.
விஜய் குறித்து ஜேம்ஸ் விமர்சனம்
அரசியல் ரீதியாகவும் கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்து வரும் ஜேம்ஸ் வசந்தன், திமுக ஆதரவாளராக அறியப்படுகிறார். சமூக வலைதளங்களில் திமுகவுக்கு ஆதரவாகவும், அதே நேரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாகவும், அதன் தலைவர் விஜய் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.

சமீபத்தில் தேர்தல் சூழலில் அளித்த பேட்டிகளில், விஜய் மற்றும் அவரது ரசிகர்கள் குறித்து நேரடியாகவும், கடுமையான கருத்துகளையும் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதனால் சில ரசிகர்கள் அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தனர்.
ஜேம்ஸ் வசந்த் கார் கண்ணாடி உடைப்பு
இந்த பின்னணியில், சமீபத்தில் ஒரு உணவகத்திற்கு சென்றிருந்த போது, ஜேம்ஸ் வசந்தனின் காரின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் அவர் அங்கு இல்லாத நிலையில், திரும்பி வந்தபோது கண்ணாடி சேதமடைந்ததை கவனித்துள்ளார். இதனை அவர் வீடியோவாக பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “இது தறுதலைகளின் வேலையா அல்லது தர்குறிகளின் வேலையா என்று தெரியவில்லை. இன்று மதியம் நான் ஒரு உணவகத்தில் சாப்பிடச் சென்றபோது.” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு வெளியாகியவுடன், சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒருபுறம், இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான தாக்குதல் என சிலர் கண்டனம் தெரிவிக்க, மறுபுறம் அவரது அரசியல் கருத்துகளையே சாடி சிலர் எதிர்மறையான கருத்துகளையும் பதிவு செய்து வருகின்றனர்.
ஆதரவும், எதிர்ப்பும்
இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டதா, விசாரணை எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்து தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த விவகாரம் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் மேலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிட்டுள்ள இந்த வீடியோவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் நெட்டிசன்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


