கோவை: கோவையில் கங்கா மருத்துவமனை 400 தோல் தானம் செய்து சாதனை படைத்து, தோல் தானத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியது.
கங்கா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கோவை அரவிந்த் கண் மருத்துவமனையின் டாக்டர்கள் நகராஜன், லலிதா நகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் கோயம்புத்தூர் மெட்ரோபாலிடன் ரோட்டரி சங்கத் தலைவர் வைகுண்டன் பன்சாலி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
பிளாஸ்டிக் சர்ஜரி துறைத் தலைவர் டாக்டர் எஸ். ராஜா சபாபதி பேசுகையில், தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை காப்பாற்றுவதில் தோல் தானம் மிக முக்கிய பங்கு வகிப்பதாகவும், இதன் மூலம் பலரது உயிரை காப்பாற்ற முடிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆலோசகர் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜன் டாக்டர் ராஜா கண்மணி கிருஷ்ணன் கூறுகையில், இறந்த 6 மணி நேரத்திற்குள் தோலும் கண்களும் தானம் செய்யலாம் என்றார். கண் தானம் பார்வையை வழங்குவதுடன், தோல் தானம் தீக்காய நோயாளிகளின் உயிரைக் காக்க உதவுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தானம் செய்பவரின் வீடு, மருத்துவமனை அல்லது பிரேத அறையிலேயே இந்த தானத்தை பெற முடியும் என்றும், பயிற்சி பெற்ற மருத்துவ குழுவினர் உடனடியாக வந்து செயல்படுவார்கள் என்றும் தெரிவித்தார். இந்த செயல்முறை எந்தவித ரத்தக் கசிவும் இல்லாமல் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் விளக்கினார்.
Read news: கோவை ரயில் நிலையத்தில் 350 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்- மர்ம நபர்களை தேடும் போலீஸ்…
2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கங்கா தோல் வங்கி தற்போது தென்னிந்தியாவில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை 308 நோயாளிகளுக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது. 20 நகரங்களில் உள்ள 32 மருத்துவமனைகள் வழியாக 124 நோயாளிகளுக்கு தோல் வழங்கப்பட்டுள்ளது. கங்கா மருத்துவமனையில் மட்டும் 184 நோயாளிகளுக்கு தோல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தானமாக பெறப்படும் தோலை 5 ஆண்டுகள் வரை பாதுகாக்க முடியும். தேவையான போது விமானம் அல்லது சாலை மார்க்கமாக எடுத்துச் செல்லப்படுகிறது. 24 மணி நேர தோல் வங்கி சேவை செயல்பட்டு வருகிறது.
+91 422 4250000 என்ற எண்ணிற்கு அழைப்பு வந்த 30 நிமிடங்களுக்குள் மருத்துவ குழுவினர் சேவைக்கு தயாராக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.
Read news: மனைவிக்கு தொல்லை; நண்பனை தென்னந்தோப்பில் புதைத்த தம்பதி; பொள்ளாச்சியில் பரபரப்பு!
இந்த நிகழ்ச்சியில் தோல் தானத்தால் குணமடைந்து மறுவாழ்வு பெற்ற நோயாளிகள் கலந்து கொண்டு நன்றியை தெரிவித்தனர். மேலும் தோல் தானத்தை ஊக்குவித்த தன்னார்வ அமைப்புகள், பணியாளர்கள் மற்றும் தனிநபர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
தோல் தானம் செய்வதன் மூலம் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்பதால், பொதுமக்கள் முன்வந்து தோல் தானம் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



