கோவை: கோவை அருகே டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்றக் கோரி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் பிரதான சாலையில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எளிய கூலித் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தினர் அதிகம் வசிக்கும் பகுதியில் இயங்கி வரும் இந்த மதுக்கடையால் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் குற்றம்சாட்டினர்.
போராட்டத்தில் பேசிய பெண்கள், “கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்த டாஸ்மாக் கடையில் மது அருந்தியதால் ஏற்பட்ட கல்லீரல் பாதிப்பு மற்றும் போதை சம்பந்தப்பட்ட விபத்துகளால் எங்கள் பகுதியைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட ஆண்கள் உயிரிழந்துள்ளனர்” என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
மேலும், பல குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இளம் பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும் இந்த டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
வீடியோ
தகவல் அறிந்து வந்த டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த கோரிக்கையை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, பெண்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர்.
இன்னும் கடையை நிரந்தரமாக அகற்றவில்லை என்றால் அடுத்த கட்டமாக மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அத்தப்பகவுண்டன்புதூர் பகுதி பெண்கள் எச்சரிக்கை விடுத்தனர்.



