The Nilgiris: A Shared Wilderness- OTTயில் ரிலீஸ் ஆன நீலகிரியின் ஆவணப்படம்…!

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வெளியான “The Nilgiris: A Shared Wilderness” ஆவணப்படம்

இயற்கை, வனவிலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு இடையேயான புரிந்துணர்வான வாழ்வை மிகவும் அழகாக பதிவு செய்துள்ள “The Nilgiris: A Shared Wilderness” ஆவணப்படம், ஜியோ ஹாட்ஸ்டார் OTT தளத்தில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இது ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் நேஷனல் ஜியோகிராபிக்கின் சிறப்பு ஆவணப்படமாகும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக விளங்கும் நீலகிரியின் இயற்கை வளங்களையும், அங்கு வாழும் உயிரினங்களின் வாழ்க்கைப் பயணத்தையும் அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது.

தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய 3 மாநிலங்களை இணைக்கும் நீலகிரி மலைத்தொடர், இந்தியாவின் முதல் உயிரிப்பன்மை பாதுகாப்பு மண்டலமாக விளங்குகிறது. இந்த ஆவணப்படம் அவற்றை மிக ரம்மியமான காட்சிகளுடன் நமக்கு அறிமுகப்படுத்துகிறது.

Advertisement

சர்வதேச அளவில் புகழ்பெற்ற வனவிலங்கு இயக்குநரான Sanesh Kumar இயக்கியுள்ள இந்த ஆவணப்படம், சுமார் 3 ஆண்டுகள் செய்யப்பட்ட ஆய்வு மற்றும் படப்பிடிப்பின் விளைவாக உருவாகியுள்ளது. அவரோடு இணைந்து Robin Darius Conz, Nakul Raj, Sameer Jain, Nikhil Virdi ஆகியோரும் முக்கிய ஒளிப்பதிவாளர்களாக பணியாற்றியுள்ளனர்.

கிரியேட்டிவ் இயக்குநராக Vydeh Kadur, ஆராய்ச்சி இயக்குநராக Priya Raghunandhini Singh பணியாற்றியிருக்க, Susheela Raman, Neel Adhikari, Sam Mills ஆகியோர் பின்னணி இசையை அமைத்துள்ளனர்.

தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கான தணிக்கைச் சான்றிதழ்களை பெற்று வெளியாகியுள்ளது. நீலகிரியின் மாறுபட்ட பருவநிலைகள் ஆவணப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

புலிகள் மற்றும் யானைகளை மட்டும் மையப்படுத்தாமல், நீலகிரியில் வாழும் மிகச் சிறிய உயிரினங்களுக்கும் சம முக்கியத்துவம் இந்த ஆவணப்படத்தில் வழங்கப்பட்டுள்ளது. அரிய வகை பல்லிகள், பறவைகள், காட்டு நாய்கள், நீலகிரி தார் போன்ற உயிரினங்களின் வாழ்க்கைச் சுழற்சிகள் பார்வையாளர்களை ஆச்சரியமூட்டி நகரவிடாமல் செய்கின்றன.

மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையேயான இசைவான வாழ்க்கை என்பதுதான் இந்த ஆவணப்படத்தின் மையக் கருத்து.

தேயிலைத் தோட்டங்கள், கிராமங்கள், காடுகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ள சூழலில், வனவிலங்குகளும் மனிதர்களும் எவ்வாறு இடத்தை பகிர்ந்து கொள்கிறார்கள்? ஒருவர் இருக்கும் போது மற்றொருவர் எவ்வாறு விலகிச் செல்கிறார்கள்? என்பதையெல்லாம் காட்சிகளாகவே இந்த ஆவணப்படத்தில் பார்க்கலாம்.

“பாதுகாப்பு என்பது இயற்கையை மனிதர்களிடமிருந்து பிரிப்பது அல்ல; மாறாக மனிதர்களும் வனவிலங்குகளும் ஒன்றாக வாழும் வழிகளை உருவாக்குவதே உண்மையான பாதுகாப்பு” என்ற செய்தியை வலியுறுத்திக் கூறியுள்ளது இந்த ஆவணப்படம்.

இந்த ஆவணப்படத்தின் மிகப்பெரிய பலமே ஒளிப்பதிவுதான். மேகங்களைத் தழுவும் மலைச்சிகரங்கள், பசுமை விரிந்த பள்ளத்தாக்குகள், விலங்குகளின் அரிய தருணங்கள் என அனைத்தும் திரையில் நம் கண் முன் விரிந்து நம்மையும் சிலிர்க்கச் செய்கின்றன.

அதனுடன் இணையும் இசை, பார்வையாளர்களை நேரடியாக நீலகிரியின் மையப் பகுதிக்கே அழைத்துச் சென்று விடுகிறது.

மொத்தத்தில், “The Nilgiris: A Shared Wilderness” என்பது ஒரு சாதாரண இயற்கை ஆவணப்படம் அல்ல. அது இயற்கையை நேசிக்கவும், பாதுகாக்கவும், மனிதன் மற்றும் வனவிலங்குகள் இடையேயான சமநிலையை புரிந்து கொள்ளவும் அழைக்கும் ஒரு காட்சிப்பயணம். இயற்கை ஆர்வலர்கள் மட்டுமின்றி குழந்தைகள், வயதானவர்கள் என ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய ஆவணப்படமாக திகழ்கிறது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

எம்.எல்.ஏ கேட்டவுடன் ஓடிவந்து திருக்குறள் ஒப்புவித்த அரசு பள்ளி மாணவன்…

கோவை சூலூர் அரசுப் பள்ளியில் எம்.எல்.ஏ கேட்ட கேள்விக்கு மாணவன் உடனடியாக திருக்குறள் ஒப்புவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பள்ளி வரவேற்பு நிகழ்வில் எம்.எல்.ஏ என்.எம். சுகுமார் கலந்து கொண்டார்.