கோவை: கோவை மாநகரில் 940 ரவுடிகளை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், நடப்பாண்டில் இதுவரை 57 ரவுடிகள் மாநகரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோவை மாநகரில் கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து, அடிதடி உள்ளிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்த மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பையும், சட்டம்-ஒழுங்கையும் உறுதி செய்யும் நோக்கில் ரவுடிகள் மீது தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை மாநகர போலீஸ் சட்டத்தின் 51A பிரிவின் கீழ், தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை மாநகர எல்லைக்கு வெளியேற்றும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி கடந்த ஆண்டு 178 ரவுடிகள் ஆறு மாதங்களுக்கு மாநகர எல்லையில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இதுவரை 57 ரவுடிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். வெளியேற்ற உத்தரவை மீறி மீண்டும் மாநகருக்குள் நுழைந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் அடுத்த கட்டமாக வெளியேற்றப்பட உள்ள ரவுடிகளின் பட்டியலும் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
Also Read: ஆடி 4வது வெள்ளி ஸ்பெஷல்… பெண்கள் மறக்காமல் இந்தப் பூஜையை செய்ய தவறாதீர்கள்!
கோவை மாநகரில் தற்போது மொத்தம் 940 ரவுடிகள் போலீசாரின் கண்காணிப்பு பட்டியலில் உள்ளனர். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 719 ஆக இருந்த நிலையில், தற்போது கூடுதலாக 221 பேர் கண்காணிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
போலீசார் ரவுடிகளை ஏ பிளஸ், ஏ, பி, சி என நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர். கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் ஏ பிளஸ் மற்றும் ஏ பிரிவிலும், கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து, அடிதடி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையவர்கள் பி மற்றும் சி பிரிவிலும் இடம்பெற்றுள்ளனர்.
வடக்கு சரகத்தில் 366 ரவுடிகளும், தெற்கு சரகத்தில் 574 ரவுடிகளும் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் பலர் மாநகரில் வசித்து வரும் நிலையில், சிலர் தலைமறைவாகவும், சிலர் சிறையிலும் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Also Read: கோவையில் கொடூரம்; நண்பனை சுத்தியால் அடித்து கொ** செய்து வீடியோ வெளீயிட்ட பகீர்…
ஏ பிளஸ் ரவுடிகள் துணை காவல் ஆணையர், ஏ பிரிவு ரவுடிகள் உதவி காவல் ஆணையர், பி பிரிவு ரவுடிகள் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சி பிரிவு ரவுடிகள் உதவி ஆய்வாளர்களின் நேரடி கண்காணிப்பில் உள்ளனர்.
தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர்களின் வருமான ஆதாரங்கள், நீதிமன்றத்தில் ஆஜராகும் நிலை உள்ளிட்ட விவரங்களும் கண்காணிக்கப்படுகின்றன. குற்றச்செயல்களை முன்கூட்டியே தடுக்கவும், கோவை மாநகரில் சட்டம்-ஒழுங்கை நிலைநிறுத்தவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.





