கோவை: நாட்டின் 80-வது சுதந்திர தின விழா நாளை (ஆக. 15) நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கோவை மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெறுகிறது. இதையொட்டி மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. விழா மேடை, தேசியக் கொடி ஏற்றும் கம்பம் அமைத்தல், மைதானத்தை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகைகள் அவிநாசி சாலை உப்பிலிபாளையத்தில் உள்ள சி.எஸ்.ஐ. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
நாளை காலை 8.50 மணிக்கு வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் விழாவில் கோவை கலெக்டர் பவன்குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.
இதையடுத்து அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும், காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பதக்கங்களும் வழங்கப்பட உள்ளன.
மேலும், இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகாவில் நடைபெறும் அணிவகுப்பை போன்று மாநகர ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்பும், பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஜிம்னாஸ்டிக் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசாரின் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநகர காவல் கமிஷனர் கண்ணன் தலைமையில் 4 துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்கள் மற்றும் போலீசார் என சுமார் 1,200 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டப் பகுதிகளில் எஸ்.பி. பவன்குமார் ரெட்டி தலைமையில் பேரூர், பெரியநாயக்கன்பாளையம், கருமத்தம்பட்டி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி மற்றும் வால்பாறை ஆகிய 6 உட்கோட்டங்களில் சுமார் 800 போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல், கோவை ரயில் நிலையம், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை விமான நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் மற்றும் பீளமேடு போலீசார் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “கோவை மாநகர் முழுவதும் இன்று காலை 8 மணி முதல் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் கொண்டுவரப்படுகிறது. சிறப்பு வாகன சோதனைகள் நடத்தப்படுவதுடன், ஓட்டல்கள், விடுதிகள் மற்றும் லாட்ஜ்களிலும் தீவிர சோதனை நடத்தப்படும். சந்தேகத்திற்கிடமான நபர்கள் யாரேனும் இருந்தால் அவர்களை பிடித்து விசாரணை நடத்தப்படும்” என்றார்.
சுதந்திர தின விழாவையொட்டி கோவை மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் போலீசாரின் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.





