கோவை: பஸ்களுக்கு இடையேயான நேர இடைவெளி தொடர்பாக ஏற்பட்ட தகராறில், மற்றொரு தனியார் பஸ்சின் முன்பக்கக் கண்ணாடியை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்ட டிரைவர் மற்றும் கண்டக்டரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியைச் சேர்ந்தவர் சரண் (26). இவர் தனியார் பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். கடந்த 10-ம் தேதி மாலை சரவணம்பட்டி – துடியலூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரி பஸ் நிறுத்தம் அருகே சரண் பஸ்சை ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது, மற்றொரு தனியார் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் கண்டக்டருடன், பஸ்களுக்கு இடையேயான நேர இடைவெளி தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த அந்த இருவரும், சரண் ஓட்டி வந்த பஸ்சின் முன்பக்கக் கண்ணாடியை அடித்து நொறுக்கியதுடன், அவரை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சரண் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பஸ் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டவர்கள் என்.ஜி.ஜி.ஓ காலனியைச் சேர்ந்த இளங்கோ (21) மற்றும் கணபதி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்வரன் (29) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.





