கோவை: சுக்கு காபி குடித்துவிட்டு படுத்த கூலித் தொழிலாளி மயங்கி உயிரிழந்த சம்பவம் கோவை சின்ன சௌரிபாளையத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீளமேடு போலீசார் விசாரணை.
கோவை சின்ன சௌரிபாளையம், கிழக்கு 6-வது வீதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (48). கூலித் தொழிலாளியான இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று மாத்திரைகள் உட்கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 29-ம் தேதி மாலை வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய பாலமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பின்னர் சுக்கு காபி குடித்துவிட்டு கட்டிலில் படுத்து உறங்கியுள்ளார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு அவரது மனைவி தெய்வானை (37), பாலமுருகனை வந்து பார்த்தபோது, அவர் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக பாலமுருகனை ஆட்டோ மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், நாடித்துடிப்பு மிகவும் குறைவாக இருப்பதை கண்டறிந்து, மேல் சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இதையடுத்து பாலமுருகனை மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





