கோவை: கோவையில் தொழிலதிபரின் ரூ.10 கோடி மதிப்புள்ள 1,000 சவரன் நகை மாயம் தொடர்பாக மருத்துவர் மருமகன் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை கணபதி நகரைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சண்முகபாண்டியன் (67). இவரது மகள், கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மருத்துவர் எம். விக்னேஷை திருமணம் செய்து கொண்டார்.
விக்னேஷின் குடும்பம் நிதி நெருக்கடியில் இருந்ததால், சண்முகபாண்டியன் தனது மருமகன் மற்றும் அவரது குடும்பத்தினரை கோவை காளப்பட்டியில் உள்ள தனது வீட்டில் தங்க வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்த வீட்டை தனது மனைவியின் பெயருக்கு மாற்றித் தருமாறு மருத்துவர் விக்னேஷ் வலியுறுத்தியதாகவும், இதனால் குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம், அந்த வீட்டை சண்முகபாண்டியன் மற்றொரு நபருக்கு ரூ.15 கோடிக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த விக்னேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் திடீரென வீட்டை காலி செய்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களின் திடீர் வெளியேற்றம் சந்தேகத்தை ஏற்படுத்தியதால், வீட்டில் இருந்த லாக்கரின் சாவியை திரும்பக் கேட்டதாக சண்முகபாண்டியன் தெரிவித்துள்ளார்.
ஆனால், சாவி ஒப்படைக்கப்படாததால் லாக்கரை உடைத்து பார்த்தபோது, அதில் இருந்த சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான 1,000 சவரன் (சுமார் 8 கிலோ) தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவர் விக்னேஷிடம் கேட்டபோது, 100 சவரன் நகைகளை மட்டும் திருப்பி வழங்கியதாகவும், மீதமுள்ள நகைகளை ஒப்படைக்காமல் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சண்முகபாண்டியன் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சண்முகபாண்டியன் அளித்த புகாரின் பேரில், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் மருத்துவர் எம். விக்னேஷ், அவரது தாய் வாசுகி மற்றும் சகோதரி மருத்துவர் எம். ஜீவிதா ஆகிய மூவர் மீது வழக்குப்பதிவு செய்து, சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் விசாரணைக்கு பிறகே இந்த வழக்கில் உண்மை நிலை மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பான முழுமையான விவரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


