கோவை: கோவையில் வீட்டின் பூந்தொட்டியின் பின்புறம் மறைந்திருந்த நாகப்பாம்பை பத்திரமாக மீட்ட பாம்பு பிடி வீரரின் செயல் வைரலாகி வருகிறது.
கோவை குனியமுத்தூர் மின் நகர் பகுதியில் உள்ள அப்துல் மாலிக் என்பவரின் வீட்டில் நேற்று இரவு சுமார் 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று புகுந்தது. இதனால் வீட்டில் பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து, வீட்டின் உரிமையாளரின் மகன் ஷேக் சமீர், பாம்பு பிடி வீரரான ஸ்னேக் அமீன் என்பவருக்கு தகவல் அளித்தார். தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த ஸ்னேக் அமீன், வீட்டின் முன்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டியின் பின்புறம் மறைந்திருந்த நாகப்பாம்பை சாமர்த்தியமாக உயிருடன் மீட்டார்.
பின்னர் பிடிபட்ட பாம்பு குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களின் அறிவுறுத்தலின்படி, மதுக்கரை வனப்பகுதியில் பாம்பு பத்திரமாக விடப்பட்டது.
கோவை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில், குறிப்பாக வனப்பகுதியை ஒட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளில் கடும் வெயிலின் தாக்கத்தால் பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், பாம்புகளை கண்டால் உடனடியாக வனத்துறை அல்லது பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாம்பை பாதுகாப்பாக மீட்ட ஸ்னேக் அமீனுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மேலும், நேற்று மட்டும் கோவை மாநகரப் பகுதியில் எட்டுக்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிக்கப்பட்டு வனப்பகுதிகளில் பத்திரமாக விடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ


