கோவை: கோவை அன்னூர் அருகே சத்தி சாலையில் பா.ஜ.க பிரமுகரின் கார் மோதிய பயங்கர விபத்தில் இருவர் உயிரிழந்து, 7 பேர் படுகாயமடைந்தனர்.
கோவை மாவட்டம், அன்னூர் அருகே சத்தி சாலையில் இன்று மதியம் பா.ஜ.க பிரமுகரின் சொகுசு கார், முந்திச் செல்ல முயன்ற போது அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய விபத்தில் மன்னார்குடியைச் சேர்ந்த இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் பா.ஜ.க பிரமுகர் உட்பட 7 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அவலம்; வனவிலங்கு தண்ணீரை வடிகட்டி குடிக்கும் பழங்குடியினர்!
கோவை மாவட்டம் அன்னூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பாசூர் செட்டியார் மில் பஸ் ஸ்டாப், பி.ஜி மஹால் எதிரே இன்று மதியம் சுமார் 2:30 மணி அளவில் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. வடக்கலூர் காரியகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த தேவனன் (73) என்பவர் தனது எக்ஸ்எல் சூப்பர் இருசக்கர வாகனத்தில் அன்னூரில் இருந்து புளியம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவருக்குப் பின்னால் அன்னூர் பொன்னேகவுண்டன்புதூரைச் சேர்ந்த பா.ஜ.க வடக்கு மாவட்டத் தலைவர் கரு. மாரிமுத்து (42) என்பவர் தனது இன்னோவா காரை ஓட்டி வந்துள்ளார்.
அன்னூர் சத்தி சாலையில் செட்டியார் மில் அருகே சென்ற போது, பா.ஜ.க பிரமுகர் கரு. மாரிமுத்து தனது இன்னோவா காரை கொண்டு முன்னால் சென்ற எக்ஸ்எல் சூப்பர் பைக்கை முந்திச் செல்ல முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக காரின் கட்டுப்பாட்டை இழந்த இன்னோவா கார், வலது பக்கமாகச் சென்று எதிரே புளியம்பட்டியில் இருந்து அன்னூர் நோக்கி வந்த மாருதி எர்டிகா (Ertiga) கார் மீது நேருக்கு நேர் வேகமாக மோதியது.
இந்த கொடூர மோதலின் நடுவே பைக் ஓட்டி வந்த பெரியவர் தேவனன் மீதும் வாகனம் மோதியுள்ளது.
இந்த விபத்தில் சிக்கிய எர்டிகா காரில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த பரசுராம் (42), பழனிவேல் (52), விக்ரம் (23), சதீஷ் (22) ஆகியோர் கோவையில் ஒரு திருமண விழாவில் பங்கேற்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இன்னோவா கார் மோதிய வேகத்தில் எர்டிகா கார் முற்றிலும் நசுங்கியது. இதில் காரின் முன்பகுதியில் இருந்த பரசுராம் (42) மற்றும் பழனிவேல் (52) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்து அன்னூர் போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பலத்த காயமடைந்த பரசுராம் மற்றும் பழனிவேல் ஆகிய இருவரையும் மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் எர்டிகா காரில் இருந்த விக்ரம் மற்றும் சதீஷ் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது; சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Also Read: கோவை மத்திய ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை…
இதேபோல் விபத்தை ஏற்படுத்திய இன்னோவா காரில் இருந்த பா.ஜ.க பிரமுகர் கரு. மாரிமுத்து (42), அவரது மனைவி ஜோதிமணி (38), மற்றும் உறவினர்களான பண்ணாரி (60), ருக்மணி (58), முருகன் (36) ஆகிய 5 பேரும் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் உடனடியாக திருமுருகன்பூண்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் எக்ஸ்எல் சூப்பர் பைக்கில் சென்ற தேவனனும் (73) காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வீடியோ
ஒரே விபத்தில் 2 பேர் உயிரிழந்து, 7 பேர் படுகாயமடைந்த இந்தச் சம்பவத்தால் அன்னூர்–சத்தி நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
அன்னூர் போலீசார் விபத்துக்கு உள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து குறித்து அன்னூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


