கோவை: கோவை ராமநாதபுரம் அருகே சமையல் கேஸ் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் தீக்காயமடைந்தனர்.
கோவை ராமநாதபுரம் பாரதி நகர் 2-வது வீதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்குமார் (35). இவரது மனைவி மகேஸ்வரி (30). இவர்களுக்கு சாய் மித்ரன் (4) என்ற மகனும், சாய் ஸ்ரீ (1½) என்ற மகளும் உள்ளனர்.
நேற்று முன்தினம் காலை மகேஸ்வரி குடும்பத்தினருக்காக டீ தயாரிக்க சமையலறைக்குச் சென்றுள்ளார். அப்போது சமையல் கேஸ் சிலிண்டருடன் இணைக்கப்பட்டிருந்த குழாயில் கசிவு ஏற்பட்டு, வீடு முழுவதும் கேஸ் பரவியிருந்ததாக கூறப்படுகிறது. இதை கவனிக்காமல் மகேஸ்வரி கேஸ் அடுப்பைப் பற்றவைத்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக வீடு முழுவதும் பரவியிருந்த கேஸ் தீப்பற்றி பயங்கரமாக எரிந்தது. இந்த தீ விபத்தில் மகேஸ்வரி, அவரது கணவர் விக்னேஷ்குமார் மற்றும் குழந்தைகள் சாய் மித்ரன், சாய் ஸ்ரீ ஆகிய 4 பேரும் தீக்காயமடைந்து அலறினர்.
அவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடி வந்து தீயை அணைத்தனர். பின்னர் தீக்காயமடைந்த 4 பேரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காலை நேரத்தில் கேஸ் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





