கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் காமராஜூவுக்கு, கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு எரிசாராயம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையில், மத்திய நுண்ணறிவு பிரிவு எஸ்.ஐ. சேகர், தலைமைக்காவலர் மதிவாணன் மற்றும் போலீசார் கேரள மாநிலம் கண்ணூருக்கு விரைந்து சென்றனர்.
அங்கு கண்ணூர் கலால் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரு மாநில அதிகாரிகளும் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து கேரள மாநிலம் கண்ணூருக்கு கொண்டு வரப்பட்ட லாரியை சோதனையிட்டபோது, அதில் 200 கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 7,000 லிட்டர் எரிசாராயம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, எரிசாராயத்துடன் லாரியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவரை கைது செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட நபர், பறிமுதல் செய்யப்பட்ட 7,000 லிட்டர் எரிசாராயம் மற்றும் லாரி ஆகியவை மேல்நடவடிக்கைக்காக கேரள மாநில கலால் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
மாநிலம் விட்டு மாநிலம் கடந்து நடைபெற்ற மிகப்பெரிய எரிசாராய கடத்தலை தடுத்து நிறுத்திய கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை, கடத்தல் கும்பல்களுக்கு கடும் எச்சரிக்கையாக அமைந்துள்ளதுடன், சட்டவிரோத மதுபான கடத்தலுக்கு எதிரான கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தன.




