கோவை : தேர்தல் முடிந்த முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று கோவை குற்றாலத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
கோவையின் பிரதான சுற்றுலா தளங்களில் முக்கியமானது கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 23ம் தேதி நடைபெற்ற நிலையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சுற்றுலாத்தலம் ஒரு நாள் மூடப்பட்டது.
இதனிடையே, தேர்தல் முடிந்த முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று கோவை குற்றாலத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.
கோவை மக்கள் மட்டுமல்லாது அண்டை மாவட்ட மற்றும் வெளி மாநில மக்களும் கோவை குற்றாலத்தில் நீராடி மகிழ்ந்தனர். இங்கு பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பாலிதீன் கவர்கள் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சுற்றுலாவுக்கு வந்த பொதுமக்களின் உடமைகள் வனத்துறையினரின் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
கோவையில் சுமார் 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் சுட்டெரிக்கும் நிலையில், கோவை குற்றாலத்தில் குடும்பத்தோடு நீராடி பொதுமக்கள் உற்சாகமடைந்தனர்.
நீர் வரத்து குறைவாக இருந்தபோதிலும், வெப்பத்தை தணிக்கும் வகையில் நீராடியதும், வனபகுதிக்குள் டிரெக்கிங் சென்றதும் நல்ல அனுபவத்தைக் கொடுத்ததாக சுற்றுலாப்பயணிகள்ள் தெரிவித்தனர்.


