கோவை : இந்தியாவில் தனிமனித சித்திரவதைக்கு எதிராக தனி சட்டம் இதுவரை அமல்படுத்தப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுந்தரராஜன் தெரிவித்தார்.
கோவை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் “சித்திரவதை குறித்த அரசியல் நிர்ணயச் சட்டப் பார்வை” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், சித்திரவதை என்பது மனித உரிமைகளுக்கு எதிரான மிகக் கொடூரமான செயலாகும் என்றும், ஆரம்ப காலங்களில் எதிரி நாடுகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட இந்த நடைமுறை, தற்போது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள சொந்த நாட்டின் குடிமக்கள்மீதே பயன்படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது என்றும் கூறினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதை எதிர்ப்பு உடன்படிக்கையில் இந்தியா 1997-ஆம் ஆண்டு கையெழுத்திட்டிருந்தாலும், அதனை உள்நாட்டு சட்டமாக இதுவரை அமல்படுத்தவில்லை என்றார். மேலும், 2010, 2017, 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட சித்திரவதை தடுப்பு மசோதாக்களும் நிறைவேறவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 20 மற்றும் 21-வது பிரிவுகள் சமத்துவம், சட்டப்படி தண்டனை வழங்கும் நடைமுறை, உயிர் மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை உறுதி செய்கின்றன. இருப்பினும் காவல் நிலைய சித்திரவதை, சட்டவிரோத காவல், கட்டாய வாக்குமூலம் போன்ற மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மனித உரிமைகளை பாதுகாப்பது எந்த ஒரு குறிப்பிட்ட ஆட்சியின் பொறுப்பாக மட்டுமல்ல; அனைத்து ஆட்சிகளும் அதனை உறுதி செய்ய வேண்டும் என்றும், தனிமனித சித்திரவதையைத் தடுக்கும் வகையில் வலுவான சட்டம் கொண்டு வருவது காலத்தின் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த கருத்தரங்கில் கோவை வழக்கறிஞர்கள் சங்க மனித உரிமைப் பிரிவு அமைப்பாளர் வி.பி. சாரதி, சங்கத் தலைவர் ஆர். பாலகிருஷ்ணன், செயலாளர் கே. சதீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



